தீவட்டிப்பட்டி அருகே கள்ளத்துப்பாக்கிகளை தாங்களாகவே முன்வந்து ஒப்படைத்த மலைக்கிராம மக்கள் வனத்துறையினர், போலீசார் பாராட்டு
தீவட்டிப்பட்டி அருகே 20 கள்ளத்துப்பாக்கிகளை தாங்களாகவே முன்வந்து ஒப்படைத்த மலைக்கிராம மக்களை, போலீசாரும், வனத்துறையினரும் பாராட்டினர்.
ஓமலூர்
தீவட்டிப்பட்டி அருகே 20 கள்ளத்துப்பாக்கிகளை தாங்களாகவே முன்வந்து ஒப்படைத்த மலைக்கிராம மக்களை, போலீசாரும், வனத்துறையினரும் பாராட்டினர்.
விழிப்புணர்வு கூட்டம்
ஓமலூரை அடுத்த கன்னப்பாடி மலை கிராமத்தில் கள்ளத்துப்பாக்கி பயன்பாட்டை குறைக்கும் வகையில் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் டேனிஸ்பேட்டை வனச்சரக அலுவலர் பரசுராமமூர்த்தி, தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் வனத்துறையினர், போலீசார் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருப்பது குற்றமாகும். அப்படி அரசு அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து ஊரில் உள்ள ஒரு பொது இடத்தில் வைக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அப்படி தாமாக முன்வந்து துப்பாக்கியை வைப்பவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் உறுதி அளிக்கப்பட்டது.
20 கள்ளத்துப்பாக்கிகள்
இதைத்தொடர்ந்து நேற்று கனனப்பாடி மலை கிராமத்தில் மாரியம்மன் கோவில் பின்புறம் 20 கள்ளத்துப்பாக்கிகளை பொதுமக்கள் வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
டேனிஷ்பேட்டை வனச்சரக அலுவலர் பரசுராமமூர்த்தி, தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார், வனத்துறையினர் கன்னப்பாடி கிராமத்துக்கு வந்தனர்.
அங்கு பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஊரில் பொது இடத்தில் துப்பாக்கிகளை வைத்திருப்பதை வரவேற்ற அதிகாரிகள், இதுதொடர்பாக பொதுமக்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று கூறினர்.
அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்த சம்பவம் மக்களிடம் ஏற்பட்டுள்ள மனமாற்றத்துக்குஉதாரணம் என்று அதிகாரிகள் கிராம மக்களை பாராட்டினர்.
Related Tags :
Next Story