மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 2 பேர் படுகாயம்: அதிவேகமாக காரை ஓட்டி வந்த டிரைவர் உள்பட 2 பேர் கைது விபத்து காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு
கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்த விபத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். விபத்து காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இளம்பிள்ளை
கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்த விபத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். விபத்து காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2 பேர் படுகாயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் அக்கரையம்பாளையத்தை சேர்ந்த பெரியண்ணன் மகன் அருண் (வயது 22). சேலம் மாவட்டம் வாழப்பாடி சிங்கிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் அஜித்குமார் (24). இருவரும் நண்பர்கள். 2 பேரும் கடந்த 25-ந்தேதி பழனிக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி அருகே வந்த போது பின்னால் அதிவேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள தடுப்பு கம்பியில் மோதி பல அடி தூரத்திற்கு இழுத்து சென்றது. அதில் வந்த அருண், அஜித்குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
சமூக வலைதளங்களில் பரவியது
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய காரின் பின்னால் வந்த மற்றொரு காரில் இருந்த வீடியோ ேகமராவில் விபத்து நடந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் மற்றும் அதில் வந்தவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பெரம்பலூர் சென்று விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற பெரம்பலூர் மாவட்டம் எலம்பலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார் (35), கார் உரிமையாளர் வினோத் (32) ஆகியோரை கைது செய்தனர். மேலும் காரில் வந்த கவுதம்ராஜ் (31), அருண்குமார் (28) ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
குடியை மறக்க...
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
காரில் வந்தவர்கள் குடியை மறப்பதற்காக சங்ககிரி அருகே உள்ள ஒரு கோவிலுக்கு சென்று அங்கு, அவர்கள் கையில் கயிறு கட்டி உள்ளனர். பின்னர் பெரம்பலூர் செல்வதற்காக காரில் வந்தவர்கள் வழியில் மதுகுடித்து உள்ளனர். பின்னர் போதை மயக்கத்தில் டிரைவர் சதீஷ்குமார் காரை அதிவேகமாக ஓட்டி முன்னால் சென்ற மற்றொரு காரை முந்தி செல்ல முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த 2 பேரும் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் உயிர் தப்பினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story