தொடர் கனமழை, ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தீவுகளாக மாறிய வடகர்நாடக கிராமங்கள்
தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வடகர்நாடக கிராமங்கள் தீவுகள் போல காட்சி அளித்து வருகின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
கொய்னா அணையில் தண்ணீர் திறப்பு
மராட்டியத்தில் தீவிரம் அடைந்துள்ள தென்மேற்கு பருவமழையால் அந்த மாநிலத்தில் உள்ள கொய்னா அணை நிரம்பியது. இதனால் அந்த அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று அந்த அணையில் இருந்து வினாடிக்கு 4 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. இதனால் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள பசவசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது.
இதனால் அந்த அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 2½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த ஆற்றுப்படுகையில் இருக்கும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
800 ஏக்கர் கரும்பு பயிர்கள் நாசம்
கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகா ரோகி கிராமத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த கிராமத்தில் 20 வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. அந்த வீடுகளில் வசித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து உள்ளதால் அந்த கிராமத்தில் 800 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்புகள் சேதம் அடைந்து உள்ளன.
மேலும் பயிர்களை மழைநீர் அடித்து சென்று உள்ளது. ஜமகண்டி தாலுகா சிக்கடசலகி கிராமத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தரைப்பாலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் தார்வார்-விஜயாப்புரா இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
ஆற்றில் குளிக்க தடை
இதுபோல ராய்ச்சூரிலும் கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் இருக்கும் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். ராய்ச்சூர் அருகே உள்ள மந்த்ராலயாவில் கிருஷ்ணா ஆற்றில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ராய்ச்சூர் மாவட்டத்தில் ஓடும் துங்கபத்ரா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஹாவேரி மாவட்டத்தில் ஓடும் வரதா ஆற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஹாவேரி அருகே கர்ஜகி கிராமத்தில் 25 வீடுகள் மூழ்கி உள்ளன.
பெலகாவி மாவட்டம் ராயபாக் தாலுகா பிராடி கிராமத்தை வெள்ளம் முழுவதுமாக சூழ்ந்து உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள 300 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அடித்து செல்லப்பட்டன. விளைபயிர்களும் சேதம் அடைந்து உள்ளன. அந்த கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள சிஞ்சலி கிராமம் வரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் பிராடி, சிஞ்சலி உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் தீவை போல காட்சி அளிக்கின்றன.
ஏரி உடைந்தது
இதனால் அந்த 2 கிராமங்களில் வசித்தவர்களும் மிஞ்சிய பொருட்களை மூட்டை, முடிச்சுகளாக கட்டி கொண்டு வேறு ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். தொடர் கனமழை காரணமாக கதக் அருகே கொன்னூர் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி உடைந்தது.
இதனால் கொன்னூர் கிராமத்தை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. வடகர்நாடகத்தில் பெய்யும் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story