இளங்கன்று பயம் அறியாது: கடித்த விஷ பாம்பை பிடித்து கையோடு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த சிறுவன்


இளங்கன்று பயம் அறியாது: கடித்த விஷ பாம்பை பிடித்து கையோடு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த சிறுவன்
x
தினத்தந்தி 28 July 2021 9:34 AM IST (Updated: 28 July 2021 9:34 AM IST)
t-max-icont-min-icon

இளங்கன்று பயம் அறியாது என்பது போல, தன்னை கடித்த விஷ பாம்பை பிடித்து கையோடு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்த 7 வயது சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் தர்ஷித் (வயது 7). சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-வது வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில், கடந்த 16-ந்தேதி, அருகில் உள்ள வெள்ளகேட்டு கிராமத்தில் தனது பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுவன், அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தன்னை ஏதோ கடிப்பது போன்று உணர்ந்த சிறுவன், அதை விரட்டி சென்று அடித்துள்ளான்.

அடித்த பிறகு தான் அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என்று தெரியவந்துள்ளது. பின்னர் அந்த பாம்பை கையில் எடுத்துக்கொண்டு, பெற்றோரின் உதவியுடன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்துள்ளான். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு சிறுவனை டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

ஆனால் பாம்பு கடித்தால் ஏற்படும் அறிகுறிகள் எதுவும் சிறுவனின் உடலில் தெரியாததால், 2 நாட்கள் விஷமுறிவுக்கான சிகிச்சை அளித்து சிறுவனை டாக்டர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

வீட்டிற்கு சென்ற மறுநாள், சிறுவனின் கால் வீக்கமடைந்து, உடல் நலம் மோசமடைய தொடங்கியது. இதனால் மீண்டும் ஆஸ்பத்திரியில் சிறுவன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுவனை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு தலைமை டாக்டர் பூவழகி தலைமையிலான டாக்டர்கள் குழு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து ஒரு வார காலம் கொடிய பாம்பு விஷம் முறிக்கும் சிகிச்சை அளித்து, தற்போது சிறுவன் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளான். இதுகுறித்து குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் சீனிவாசன் கூறும்போது, ‘சிகிச்சையின் போது ஒரு நாள் சிறுவனிடம் நாங்கள், பாம்பை எதற்கு கையில் கொண்டு வந்தாய்? என கேள்வி கேட்டோம்.

இளங்கன்று பயம் அறியாது

அதற்கு, ‘நான் பாம்பை கையில் கொண்டு வந்தால் தானே, என்னை எது கடித்தது என்று உங்களுக்கு தெரியும்’ என்று சிறுவன் பதில் அளித்தது எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. ‘இளங்கன்று பயம் அறியாது’ என்பது இந்த 7 வயது சிறுவனின் செயலில் இருந்து ஊர்ஜிதமாகியுள்ளது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் பாம்புக்கடிக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

பாம்பு கடித்த 3 மணி நேரத்துக்குள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்ததால், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கலாம். இது தொடர்பாக பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என்றார்.

சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவினரை சந்தித்த ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் எழிலரசி வெகுவாக பாராட்டினார். அப்போது ஆஸ்பத்திரி மக்கள் தொடர்பு அதிகாரி கங்காதரன் உடன் இருந்தார்.

Next Story