கும்மிடிப்பூண்டி அருகே பெண் வக்கீல், மகள் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


கும்மிடிப்பூண்டி அருகே பெண் வக்கீல், மகள் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 28 July 2021 11:24 AM IST (Updated: 28 July 2021 11:24 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே பெண் வக்கீல், மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். உருக்கமான கடிதம் சிக்கியது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவளம்பேடு பகுதியில் உள்ள திடீர் நகரில் கடந்த 1½ ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து தனது மகள் சிவரஞ்சினியுடன் (24) வசித்து வந்தவர் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கீதாஞ்சலி (52).

சென்னை ஐகோர்ட்டு பார் கவுன்சிலில் கீதாஞ்சலி பதிவு செய்து வக்கீல் பணி செய்து வந்தார். வக்கீல் கீதாஞ்சலியின் கணவர் ராமு. ஆந்திர மாநிலம் சத்யவேடு பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகள் சிவரஞ்சினி பட்டதாரி ஆவார்.

சென்னையில் உள்ள உறவினர்களை விட்டு பிரிந்து தனது மகளுடன் வசித்து வந்த வக்கீல் கீதாஞ்சலி பல்வேறு பிரச்சினைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் கீதாஞ்சலியின் வீட்டுக்கு வந்த அவரது தங்கை ராஜீ, கதவு திறக்கப்படாததை கண்டும், கீதாஞ்சலி செல்போனை எடுக்காததை அறிந்தும் பதற்றம் அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் மாடி கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது, தாயும், மகளும் ஒரே மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உருக்கமான கடிதம்

வீட்டின் கதவுகள் உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. முதல் அறையில் மின்வசிறியை வேகமாக ஓடவிட்ட நிலையில் அனைத்து ஜன்னல்களும்் துணி வைத்து மூடப்பட்டிருந்தது. அவர்கள் ஆசையுடன் வளர்த்து வந்த நாய் குட்டியை வீட்டுக்கு வெளியே அனுப்பி விட்டு இந்த விபரீத முடிவை அவர்கள் எடுத்து உள்ளனர்.

முன் அறையின் மின்விசிறியை வேகமாக ஓட விட்டால் தூக்கிட்டு கொள்ளும் போது தங்களது அலறல் சத்தம் வெளியே கேட்காது என்ற எண்ணத்தில் அவர்கள் செயல்பட்டு உள்ளனர். மேலும் தூக்கிட்டு கொள்வதற்கு படி வைத்த ஒரு பெரிய ஏணி போன்ற நாற்காலியை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

அவர்கள் இருவரது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக வக்கீல் கீதாஞ்சலி எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அதில் தனக்கு தெரிந்த பொன்னேரியை சேர்ந்த தோழி பார்வதி என்பவர் பற்றியும், தனது தங்கை ராஜீயின் வாழ்க்கை குறித்தும் குறிப்பிட்டு எழுதி உள்ளார்.

மன்னியுங்கள்

அதன் விவரம் வருமாறு:-

பார்வதி அம்மா அவர்களுக்கு, தங்களிடம் கடன் பட்ட பணத்தை என் நிலத்தின் மூலம் பெற்றுக்கொள்ளவும். அதற்கான டாக்கு மெண்ட் பீரோவில் உள்ளது. இது வரை என்னை ஆதரித்ததற்கு நன்றி. நாங்கள் தவறு செய்யவில்லை. நாங்கள் மாட்டிக்கொண்டு விட்டோம். நாங்கள் வாழ தகுதி அற்றவர்கள். மன்னியுங்கள்.

தங்கை ராஜீ, உன் புருஷனோடு சேராமல் தனிமையில் வாழ். நான் உன்னை பெற்ற மகளாகவே நினைக்கிறேன். என்னை மன்னிக்கவும்.

நாங்கள் வாழ்வதற்கும் பணம் இல்லாமல், சாவு எடுப்பதற்கும் பணம் இல்லாமல் விட்டு செல்கிறேன். நிலத்தை விற்று பெற்று கொள். மானமில்லாமல் வாழ தகுதி இல்லாமல் செல்கிறேன். என் சாவுக்கு என் மாமனார் தான் காரணம் என்று கூற இயலாது. எங்களை ஆதரிக்காததால் தான் நாங்கள் இறக்கிறோம். என் கணவர் தான் காரணம். எல்லாவற்றுக்கும் நல்ல குடும்பத்தில் வாழ்க்கை இல்லாததால் இந்த துன்பம் தான் நேரிடும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து கீதாஞ்லியின் தங்கை கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், குடும்ப பிரச்சினையால் தனது அக்கா கீதாஞ்சலியும், அவரது மகளும் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டு உள்ளார்.

கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Next Story