கோவில்பட்டியில் கொரோனாவுக்கு கணவன், மனைவி பலி


கோவில்பட்டியில் கொரோனாவுக்கு கணவன், மனைவி பலி
x
தினத்தந்தி 28 July 2021 9:34 PM IST (Updated: 28 July 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கொரோனாவுக்கு கணவன், மனைவி பலியானார்கள்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி ஏ.கே.எஸ் தியேட்டர் ரோட்டைச் சேர்ந்தவர் 75 வயது ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். அவரது மனைவி 73 வயது ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்கள் இருவரும் சமீபத்தில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்களாம். பின்னர் ஊருக்கு திரும்பிய பின் இருவருக்கும் சில நாள்களாக உடல் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் பெற்றோரை பார்ப்பதற்காக வெளியூரில் இருந்த அவரது மகன்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இதை தொடர்ந்து 42 வயது மகன், 11 வயது பேரன், 9 வயது பேத்தி ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்கள் கோவில்பட்டி தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் உடல்நிலை மோசமானதால், தீவிர சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு மதுரை தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுபோல நேற்று அதிகாலையில் அவரது மனைவியும் தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவரும் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற 3 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story