‘300 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம்’ சமுத்திரம் ஏரி கரையில் உள்ள 28 வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு


‘300 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம்’ சமுத்திரம் ஏரி கரையில் உள்ள 28 வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 28 July 2021 4:07 PM GMT (Updated: 28 July 2021 4:07 PM GMT)

தஞ்சை சமுத்திரம் ஏரி கரையில் உள்ள 28 வீடுகளை இடிக்க அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் அவர்கள் எம்.எல்.ஏ.விடம் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை சமுத்திரம் ஏரி மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்டது. கடல் போல் காணப்பட்ட இந்த ஏரி தற்போது சுருங்கிக்கொண்டே வருகிறது. இந்த ஏரியின் நடுவே நான்குவழிச்சாலை போடப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஏரி 2 பகுதியாக காணப்படுகிறது.

இந்த ஏரியின் வலது கரையில் அருள்மொழிப்பேட்டை உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் 28 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இதனால் இந்த இடம் நீர்நிலை பகுதியில் உள்ளதால் இடிக்கப்போவதாக பொதுப்பணித்துறையினர் கூறி காலி செய்யுமாறு வலியுறுத்துகின்றனர்.

ஆனால் இந்த பகுதி மக்கள் நாங்கள் 300 ஆண்டுகளாக எங்கள் மூதாதையர் முதல் வசித்து வருகிறோம். கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சியில் இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டு ஆணையும் வழங்கப்பட்டது. ஆனால் வீடுகள் கட்டப்படவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் வீடுகள் இடிக்கப்போவதாக அறிவித்துள்ளதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு நேற்று பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமார், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் புண்ணியமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி பூபதி ஆகியோருடன் வந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அந்த பகுதி மக்கள், ‘நாங்கள் 10 தலைமுறையாக இங்கு வசித்து வருகிறோம். எங்களுக்கு மாற்று இடம் எதுவும் வேண்டாம். நாங்கள் தற்போது வசிக்கும் இடத்திலேயே பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் புறவழிச்சாலைக்கு மேற்கு பகுதியில் ஏரி கரையில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது தஞ்சை தொகுதியில் வருகிறது. எனவே எங்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பத்தில் இந்த இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றனர். ஆனால் தற்போது பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என கூறுகிறார்கள்’ என்றனர்.

இது குறித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறுகையில், கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்த பகுதி மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டும், அதன் பின்னர் வந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருடன் பேசி நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

Next Story