விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை நேற்று காலை மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அங்கு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதோடு கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மார்க்கெட் வீதிகளில்
தொடர்ந்து, நகராட்சிக்குட்பட்ட மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வியாபாரிகள், பொருட்கள் விற்பனை செய்வதையும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கிச்செல்கின்றனரா என்றும் கலெக்டர் டி.மோகன் ஆய்வு மேற்கொண்டார். அதோடு பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள ரேஷன் கடையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story