வாலிபரை கொன்ற கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது


வாலிபரை கொன்ற கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 28 July 2021 11:08 PM IST (Updated: 28 July 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே வாலிபரை கொன்ற கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. மேலும் சிறப்பு குழு அமைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வால்பாறை

வால்பாறை அருகே வாலிபரை கொன்ற கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. மேலும் சிறப்பு குழு அமைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

கரடி தாக்கி வாலிபர் பலி 

வால்பாறை அருகே உள்ள வில்லோணி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 36), எலெக்ட்ரீசியன். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். 

இரவில் வேலை முடிந்து தனது மனைவியை அழைத்து வருவதற்காக குடியிருப்பு அருகே உள்ள பஸ்நிறுத்தத்துக்கு மோகன்ராஜ் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கரடி மோகன்ராஜை தாக்கி இழுத்துச்சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

பொதுமக்கள் கோரிக்கை 

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

பொதுமக்கள் குடியிருப்பு அருகே கரடி நடமாட்டம் உள்ளதாலும், கரடி தாக்கி வாலிபர் இறந்துவிட்டதாலும், அந்த கரடியை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

கூண்டு வைக்கப்பட்டது 

இதையடுத்து, அந்த கரடியை பிடிக்க கூண்டு வைக்க ஆனை மலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி வனப்பாதுகாவலர் பிரசாந்த் தலைமையில் வனத்துறையினர் வில்லோணி எஸ்டேட் பகுதியில் நடமாடும் கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர். 

மேலும் அந்த கரடியை கண்காணிக்க வால்பாறை வனச்சரக அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையில் வனத்துறையினர் அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது..

தீவிர கண்காணிப்பு 

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வில்லோணி எஸ்டேட் பகுதியில் நடமாடும் கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரத்தில் வனப்பகுதி அருகே செல்ல வேண்டாம்.

 அதுபோன்று தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் அந்த கரடியை பிடிக்க தீவிரமாக கண்கணித்து வருகிறோம் என்றனர். 


Next Story