மீனவர்-மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்வு


மீனவர்-மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்வு
x
தினத்தந்தி 28 July 2021 11:11 PM IST (Updated: 28 July 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

உதவித்தொகை பெற புதிதாக 10 ஆயிரம் பயனாளிகளை சேர்த்தும், மீனவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகையில் ரூ.500 உயர்த்தியும் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுச்சேரி, ஜூலை.
உதவித்தொகை பெற புதிதாக 10 ஆயிரம் பயனாளிகளை சேர்த்தும், மீனவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகையில் ரூ.500 உயர்த்தியும் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
உதவித்தொகை உயர்வு
புதுச்சேரி முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த மே மாதம் 7-ந்தேதி பதவியேற்றார். அவர் தனது முதல் கையெழுத்தாக அரசின் மூலமாக மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வரும் முதியவர்கள், விதவைகள், முதிர்கன்னிகள், திருநங்கைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 கூடுதலாக வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.
இந்த கோப்புக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து உதவித்தொகையை உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
ரூ.500 அதிகரிப்பு
இதன்படி உயர்த்தப்பட்ட உதவித்தொகை வருகிற ஆகஸ்டு மாதம் முதல் அனைத்து பயனாளிகளுக்கும் வயதுக்கேற்ப உயர்த்தி வழங்கப்பட உள்ளது. ஆகவே 18 வயது முதல் 54 வயது வரை உள்ள விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், 55 வயது முதல் 59 வயது வரை உள்ள முதியோர்களுக்கு ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், 60 வயது முதல் 79 வயது வரை உள்ள முதியவர்களுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆகவும், 80 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
மேலும் 10 ஆயிரம் பேர்
இந்த திட்டத்தின்கீழ் தற்போது மாதந்தோறும் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 847 பேர் பயன்பெற்று வருகின்றனர். தற்போது மேலும் 10 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 847 பயனாளிகள் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் பயன்பெறுவர்.
இதன் முதல்கட்டமாக தட்டாஞ்சாவடி மற்றும் இந்திராநகர் தொகுதியில் புதிய பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகையுடன் கூடிய புதிய உதவித்தொகை பெறும் ஆணையை சட்டமன்ற வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கி தொடங்கி வைத்தார். 
நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.
மீனவர்-மாற்று திறனாளிகள்
இதேபோல் மாற்று திறனாளிகள் மற்றும் மீனவ சமுதாய மக்களுக்கு வழங்கிவரும் உதவித்தொகையையும் ரூ.500 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

Next Story