லஞ்சம் வாங்கிய துணை இயக்குனர் உள்பட 2 பேர் கைது
புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக மண்டல அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக துணை இயக்குனர் உள்பட 2 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, ஜூலை
புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக மண்டல அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக துணை இயக்குனர் உள்பட 2 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
சி.பி.ஐ.க்கு புகார்
புதுச்சேரி முதலியார்பேட்டை புவன்கரே வீதியில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக (இ.எஸ்.ஐ.) புதுப்பிக்கப்பட்ட மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக கிளை அலுவலகமும், இ.எஸ்.ஐ. மருந்தகமும் உள்ளது.
இந்தநிலையில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக மண்டல அலுவலகத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு தொகை செலுத்துவதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக சி.பி.ஐ.க்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து டெல்லி மற்றும் சென்னை பதிவு எண் கொண்ட 2 கார்களில் 4 சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் தொழிலாளர் அரசு காப்பீட்டு மண்டல அலுவலகத்துக்கு வந்தனர்.
கையும் களவுமாக சிக்கினர்
அப்போது அங்கு நுழைவாயிலில் பணியில் இருந்த தனியார் நிறுவ ன காவலாளிகள் அதிகாரிகள் என்பது தெரியாமல் அவர்களை தடுத்து நிறுத்தி பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்லும்படி அறிவுறுத்தினர்
காவலாளிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் மேலே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு உள்ளே சென்றனர். மதியம் என்பதால் ஒருசில ஊழியர்கள் உணவு இடைவேளைக்காக வீட்டிற்கு சென்றனர். ஒரு சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்தனர்.
தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்து வந்த நிலையில் மண்டல துணை இயக்குனரான மேற்கு வங்காளத்தை சேர்ந்த பத்ராஸ் கிரகோரி கல்கோ, முதுநிலை பாதுகாப்பு அதிகாரி மோஹித் ஆகியோர் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது கையும், களவுமாக பிடிபட்டனர்.
எதற்காக இந்த பணம் வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரித்ததில் தொழிலாளர்களுக்கான காப்பீடு செலுத்தாமல் இருப்பதை கண்டு கொள்ளாமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து சோதனை
இதையடுத்து இ.எஸ்.ஐ. மண்டல அலுவலகத்தில் இருந்து யாரையும் வெளியே செல்லவும், அலுவலகத்திற்கு உள்ளே வரவும் சி.பி.ஐ. அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அங்குள்ள தொலைபேசி இணைப்புகளையும் துண்டித்தனர். அதேபோல் அங்கிருந்த ஊழியர்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யவும் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து தொழிலாளர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் வேறு முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து சோதனை நடத்தினார்கள்.
இந்தநிலையில் மதிய உணவு இடைவேளைக்காக வீட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் பணிக்காக அலுவலகம் வந்தனர். அவர்கள் யாரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் அனைவரும் அலுவலக வளாகத்திலேயே காத்திருந்தனர்.
அதிகாரிகள் கைது
சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனை இரவு 7.25 மணிக்கு முடிந்தது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. அவற்றை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
லஞ்சம் வாங்கியதாக துணை இயக்குனர் பத்ராஸ் கிரகோரி கல்கோ, முதுநிலை பாதுகாப்பு அதிகாரி மோஹித் ஆகியோரை கைது செய்து அவர்களை தங்களது கார்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
தொழிலாளர் அரசு காப்பீட்டு மண்டல அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அதிகாரிகளை கைது செய்த விவகாரத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story