தனியார் பஸ் கண்டக்டர் பீர் பாட்டிலால் குத்தி கொலை


தனியார் பஸ் கண்டக்டர் பீர் பாட்டிலால் குத்தி கொலை
x
தினத்தந்தி 28 July 2021 11:14 PM IST (Updated: 28 July 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே கோவில் திருவிழாவில் குடித்து விட்டு ஆடியதை தட்டிக்ேகட்டதில் ஏற்பட்ட தகராறில் தனியார் பஸ் கண்டக்டர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

ஆற்காடு

ஆற்காடு அருகே கோவில் திருவிழாவில் குடித்து விட்டு ஆடியதை தட்டிக்ேகட்டதில் ஏற்பட்ட தகராறில் தனியார் பஸ் கண்டக்டர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

கோவில் திருவிழா

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த சர்வந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 30). தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சர்வந்தாங்கல் கிராமத்தில் உள்ள கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா நடந்தது.

விழாவையொட்டி இரவு மாட்டுவண்டியில் மேளதாளங்களுடன் சாமி ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த கிரிவாசன் என்பவர் தனது நண்பர்களான ஆற்காட்டை அடுத்த ராமநாதபுரம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஹேமபிரசாத், கேசவன், ஹரிஷ், அன்பரசன் ஆகியோருடன் மது குடித்துவிட்டு மதுபோதையில் சாமி ஊர்வலத்தின்போது நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. 

குத்திக்கொலை

இதை நாகேந்திரன் தட்டிக்கேட்டுள்ளார். இதில் நாகேந்திரன் மற்றும் கிரிவாசன் கோஷ்டியினரிடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி கிரிவாசன் வைத்திருந்த பீர் பாட்டிலால், நாகேந்திரனின் கழுத்துப்பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த நாகேந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிபோதையில் இருந்த கிரிவாசன், ஹேமபிரசாத், கேசவன், ஹரிஷ், அன்பரசன் ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் கொலை சம்பவம் நடந்த இடத்தில் பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story