விவசாய வளர்ச்சிக்கான நல்ல அறிவிப்புகள் வெளியாகும்
விவசாய வளர்ச்சிக்கான நல்ல அறிவிப்புகள் வெளியாகும்
கோவை
முதன் முறையாக தாக்கல் செய்யப்படும் தனி பட்ஜெட்டில் விவசாய வளர்ச்சிக்கான நல்ல அறிவிப்புகள் வெளியாகும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
கருத்து கேட்பு கூட்டம்
தமிழ்நாட்டில் முதன்முறையாக விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதையொட்டி தமிழக விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கத்தினர் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியதாவது
முதன்மை மாநிலம்
தமிழ்நாட்டில் முதல்முறையாக விவசாயத்துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. விவசாய வளர்ச்சிக்கு தேவையான நல்ல அறிவிப்புகள் இடம்பெற உள்ளது.
இதற்காக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. எனக்கு உண்மையிலேயே விவசாயம் தெரியும். மற்றவர்களைபோல் முண்டாசு கட்டிக்கொண்டு விவசாயி போல் போஸ் கொடுக்க தெரியாது.
விவசாயிகளுக்காக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 ஆண்டு தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்த உள்ளார்.
இதன் மூலம் விவசாயத்துறையில் தமிழகம் முதன்மையான மாநிலமாக திகழும். விவசாயிகளின் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வனப்பரப்பு அதிகரிக்கப்படும்
கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது:-
காட்டு யானைகளால் பயிர்கள் சேதமாவதை தடுக்க வெட்டப்படும் அகழிகள் ஒரு ஆண்டுக்குள் மழையால் மூடிவிடுகிறது.
எனவே 8 அடி ஆழத்தில் இருபுறமும் சிமெண்ட் மூலம் கரைகள் கட்டப்பட்டு அகழி அமைக்கும் பணிகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
தமிழ்நாட்டில் வனப்பரப்பு 23 சதவீதமாக உள்ளது. அதை 33 சதவீத மாக உயர்த்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்காக 4½ கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு வனப்பரப்பு அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தென்னையில் வெள்ளை பூச்சியால் ஏற்படும் பாதிப்பை தடுக்க வேண்டும், வனவிலங்குகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்,
விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் நல்ல அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று விவாயிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
செயல்விளக்கம்
இதையடுத்து பல்கலைக்கழக பழத்தோட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் பயிர் வளர்ச்சி யூக்கிகள் மற்றும் பூச்சி மருந்து தெளித்தல் பற்றிய செயல் விளக்க நிகழ்ச்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பார்வையிட்டர்.
இதில் வேளாண்மை துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண் இயக்குனர் அண்ணாதுரை, வேளாண் விற்பனை இயக்குனர் வள்ளலார், பல்கலை துணை வேந்தர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story