உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி


உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
x
தினத்தந்தி 28 July 2021 11:27 PM IST (Updated: 28 July 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது என்று வேலூரில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

வேலூர் 

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது என்று வேலூரில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

அமைச்சர் பேட்டி

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி திட்ட பணிகள் மற்றும் வாழ்வாதார திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார். 

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். கொரோனா தொற்று உள்பட பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட தேக்க நிலையை சரிசெய்து, அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

 வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் குறித்து கணக்கெடுப்பு முறையாக எடுக்கப்படவில்லை என்று புகார்கள் வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் குளறுபடிகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக வளர்ச்சித்துறையில் நிதி முறைகேடு மற்றும் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதி கையாடல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க. தயார்
கிராம மேம்பாடு திட்டத்தின் கீழ் கிராமங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் சாலை, தெரு மின்விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் உயர்த்தப்பட்டு தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.273 வழங்கப்படுகிறது. இது கிராமப்புற பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான செயல்பாடு.

]கடந்த காலத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் கையாடல் செய்த பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையமும் தயாராக இருக்கிறது. இந்த அரசும் அதற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

வளர்ச்சி பணிகளை ஆய்வு

முன்னதாக வேலூர், அணைக்கட்டு, காட்பாடி ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். கருகம்புத்தூரில் மகளிர் குழுவினர் சார்பில் மேற்கொள்ளப்படும் மண்புழு உரம் தயாரிப்பு,  நாட்டுக்கோழிகள் வளர்ப்பு குறித்து கேட்டறிந்தார்.

இலவம்பாடியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார். கழனிபாக்கத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பெறப்பட்ட மனுவின் அடிப்படையில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டினார்.
----

Next Story