குண்டு மைக்கை பொக்கிஷமாக பாதுகாத்து வரும் `மைக்செட்' மணி


குண்டு மைக்கை பொக்கிஷமாக பாதுகாத்து வரும் `மைக்செட் மணி
x
தினத்தந்தி 28 July 2021 11:52 PM IST (Updated: 28 July 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பேசிய குண்டு மைக்கை `மைக்செட்' மணி என்பவர் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.

வடகாடு, ஜூலை.29-
அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பேசிய குண்டு மைக்கை `மைக்செட்' மணி என்பவர் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.
`மைக்செட்’ மணி
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பரமநகரை சேர்ந்தவர் மணிக்குண்டு என்ற மணி (வயது 74). இவர் கடந்த 1963-ம் ஆண்டு முதல் `மைக்செட்' தொழில் செய்து வருகிறார்.தனது 16 வயது முதல் இத்தொழிலில் தன்னை அர்பணித்துக்கொண்டார். இதனால் இவரை இப்பகுதியினர் `மைக்செட்' மணி என்றே அழைக்கின்றனர்.
குண்டு மைக்
இவர் அப்போதே அமெரிக்க தயாரிப்பான குண்டு மைக்கை ரூ.135-க்கு வாங்கி வைத்து இருந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த கிராமங்களில் கோவில் திருவிழா நடந்தாலும் இவரைதான் அழைப்பார்கள். அரசியல் பொதுக்கூட்டம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் இவரது மைக்செட்டைதான் ஏற்பாடு செய்வார்களாம்.
வடகாடு அரசமரத்தடி மற்றும் பக்கத்து கிராமங்களில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, நெடுஞ்செழியன், நாகூர் ஹனிபா ஆகியோர்  மைக்செட் மணியின் மைக்கில் பேசியுள்ளனர். இதனால் அவர் அந்த மைக்கை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.
பாராட்டு
இதுகுறித்து `மைக்செட்' மணி கூறும்போது, அண்ணா ஒருமுறை என்னுடைய மைக்கில் பேசும்போது, குரல் கனீரென்று ஒலித்தது. இதனால் அவர் என்னை பாராட்டி சென்றார். ஒருமுறை தி.மு.க. கட்சி பாடகர் நாகூர் ஹனிபா பேசி விட்டு குண்டு மைக்கிற்கு முத்தமிட்டு விட்டு என்னை பாராட்டி சென்றார். இத்தகைய பெருமை வாய்ந்த என்னுடைய குண்டு மைக்கை இன்றளவும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறேன், என்றார்.

Next Story