தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து கீழே குதித்த காய்கறி வியாபாரி மின்மாற்றியில் விழுந்ததில் உடல் கருகி பலி
கரூரில் தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து கீழே குதித்த காய்கறி வியாபாரி மின்மாற்றியில் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி இறந்தார்.
கரூர்
காய்கறி வியாபாரி
கரூர் நீலமேட்டை சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 42). காய்கறி வியாபாரி. இவர் குடும்பத்தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் அண்ணாத்துரைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் கரூரில் உள்ள ராஜா ஆர்த்தோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
மாடியில் இருந்து குதித்தார்
இந்தநிலையில் அண்ணாத்துரை நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் திடீரென மருத்துவமனையின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது இருட்டாக இருந்ததால், கீழே இருந்த மின்மாற்றியின் மீது விழுந்தார். இதில் மின்சாரம் பாய்ந்து அண்ணாத்துரை உடல் கருகி படுகாயம் அடைந்தார்.
சாவு
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிந்து, அண்ணாத்துரை மனைவியை பிரிந்து சென்றதால் மாடியில் இருந்து குதித்தாரா? அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பிடிக்காமல் குதித்தாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story