2-வது தவணை தடுப்பூசி போட முடியாமல் முதியவர்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி முற்றிலும் இல்லாத நிலை உள்ளதால் குறிப்பிட்ட நாட்களை கடந்தும் 2-வது தவணை தடுப்பூசி போட முடியாமல் முதியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி முற்றிலும் இல்லாத நிலை உள்ளதால் குறிப்பிட்ட நாட்களை கடந்தும் 2-வது தவணை தடுப்பூசி போட முடியாமல் முதியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
தடுப்பூசி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் எடுத்த முயற்சியின் பயனாக ஏராளமானோர் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாநில அளவில் இந்த தட்டுப்பாடு உள்ளதாகவும் இதனால் சப்ளை இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கோவேக்சின் தடுப்பூசி ராமநாதபுரம் மாவட்டத்தில் யாருக்கும் போடப்படவில்லை. சிறிதளவு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு அவசர அவசியத்திற்காக போடப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் பெரும்பாலானோர் தற்போது 2-வது தவணை போட முடியாமல் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தற்போது 2-வது தவணைபோட முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா அச்சத்தை விட கொரோனா தடுப்பூசி முறையாக போட முடியாததால் ஏதும் உடல் பாதிப்பு வந்துவிடுமோ அல்லது முதல்தவணை போட்டு 2-வது தவணை உரிய காலத்திற்குள் போட முடியாவிட்டால் தடுப்பூசியின் பயன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
கோவேக்சின் தடுப்பூசி முதல்தவணை போட்டுக்கொண்டவர்களுக்கு தினமும் குறுந்தகவல் வந்த வண்ணம் உள்ளதாகவும், தடுப்பூசி வந்து போட்டுக்கொள்ளும்படியும் கூறுவதால் தினந்தோறும் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். எனவே, உடனடியாக மக்களின் அவதியை போக்கும் வகையில் கோவேக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு செய்து போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சப்பட தேவையில்லை
இதுகுறித்து சுகாதாரத்துறையினரிடம் கேட்டபோது, மாநிலம் முழுவதும் கோவேக்சின் தடுப்பூசி இருப்பு இல்லை. விரைவில் ஒதுக்கீடு வர உள்ளது. வந்ததும் அனைவருக்கும் போடப்படும். தற்போதைய நிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி முன்அறிவிப்புடன் அந்தந்த பகுதிகளில் போடப்பட்டு வருகிறது. கோவேக்சின் அவசர அவசிய தேவைகளுக்காக சிறிதளவு இருப்பு வைத்து வருகிறோம்.
கோவேக்சினை பொறுத்தவரை 42 நாட்களுக்குள்ளும், கோவிஷீல்டை பொறுத்தவரை 84 நாட்களுக்குள்ளும் 2-வதுதவணை போட்டுக் கொள்ளலாம். மக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறினர். சுகாதாரத்துறையினர் தெரிவித்தபடி கோவேக்சின் தடுப்பூசி 42 நாட்களை கடந்து பல நாட்களாகியும் போட முடியாததால் பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story