கல்லூரி மாணவர் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலைமறியல்


கல்லூரி மாணவர் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 28 July 2021 11:58 PM IST (Updated: 28 July 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் இறந்தார். இதையடுத்து உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்
கல்லூரி மாணவர் பலி
கரூர் மாவட்டம், மணவாசி அருகே உள்ள கோரக்குத்தியை  சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை நிமித்தமாக மணவாசி நோக்கி சென்று கொண்டிருந்தார். 
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி கார்த்திகேயன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
சாலைமறியல்
இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திரண்ட கார்த்திகேயன் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள்  கார்த்திகேயன் உடலை வாங்க மறுத்து கரூர்-திருச்சி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்ய வேண்டும், டிரைவரை கைது செய்ய வேண்டும்,  அப்பகுதியில் இதுபோன்று 5 பேர் விபத்தில் இறந்துள்ளதால் கிராம சாலை வழியாக லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கூறினர். 
இதையடுத்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய டிரைவர், லாரியை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் கரூர்-திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story