மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும்
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க கோரி திருவாரூரில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
திருவாரூர்;
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க கோரி திருவாரூரில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், வெண்ணாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹேமாஹெப்சிபாநிர்மலா மற்றும் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோஷம் எழுப்பினர்
கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-
தம்புசாமி: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என அறிவித்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது. இது தொடர்பாக விவசாயிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்புகிறோம் என கூறினார். இதைத்தொடர்ந்து
அனைத்து விவசாயிகளும் எழுந்து நின்று கர்நாடகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு
சத்தியநாராயணன்:- குறுவை சாகுபடி பணிகள் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில் யூரியா தட்டுபாடு இன்றி கிடைக்க வேண்டும். சோலார் மின்சாரத்துக்கான மானிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். ஆறுகள் தூர்வாரப்பட்ட நிலையில் வயல்களுக்கு செல்லும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் உள்ளது.
திருவள்ளுவன்:- திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரவுண்டா தடுப்பு சுவர் அதிக உயரமாக இருப்பதால் எதிரே வரும் வாகனம் தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. எனவே இதை சீரமைத்து விபத்தை தடுக்க வேண்டும். கோவேக்சின் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருவதால் 2-வது தவணை தடுப்பூசி போட முடியாமல் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
நன்றி
மாசிலாமணி:- வேளாண்மை துறை என்பதை விவசாயிகள் பெருமைப்படுத்தும் வகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என அறிவித்து, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என அறிவித்துள்ள முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். குறுவைக்கு சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டதால் கூடுதலாக பரப்பளவில் சாகுபடி நடைபெற்றுள்ளது. தண்ணீர் பிரச்சினையால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் முறைவைக்காமல் தண்ணீர் வழங்கிட வேண்டும்.
மருதப்பன்:- கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு தட்டுபாடுன்றி உரம், கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகை விரைவாக கிடைக்க வேண்டும். மீன்வளத்துறை மூலம் விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பதற்கான மீன் குஞ்சுகள், தீவனம் வழங்க வேண்டும். நீடாமங்கலம் ரெயில் நிலையம் அருகில் உள்ள மதுக்கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story