மாவட்ட செய்திகள்

மர்மவிலங்கு கடித்து 6 கோழிகள் சாவு + "||" + 6 chickens die

மர்மவிலங்கு கடித்து 6 கோழிகள் சாவு

மர்மவிலங்கு கடித்து 6 கோழிகள் சாவு
ஆரல்வாய்மொழியில் மீண்டும் மர்ம விலங்கு கடித்ததில் 6 கோழிகள் இறந்தன.
ஆரல்வாய்மொழி, 
ஆரல்வாய்மொழியில் மீண்டும் மர்ம விலங்கு கடித்ததில் 6 கோழிகள் இறந்தன.
மர்ம விலங்கு அட்டகாசம்
ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டு பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 2 நாய்கள் மற்றும் 12 கோழிகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது. இந்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் மீண்டும் மர்மவிலங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டது. ஆரல்வாய்மொழி வடக்கூர் வ.உ.சி. வடக்குத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 51). இவருடைய மனைவி நாகம்மாள் கோழிகள் வளர்த்து வந்தார். சில கோழிகள் கூண்டுக்குள் சென்று விடும். மற்ற கோழிகள் கொய்யா மரத்தில் தங்குவது வழக்கம்.
6 கோழிகள் சாவு
நேற்று காலை 6 மணிக்கு கோழிகளைத் திறந்து விடுவதற்காக நாகம்மாள் சென்றார். அங்கு 6 கோழிகள் படுகாயத்துடன் இறந்து கிடந்தன. சில கோழிகளுக்கு தலையே இல்லை, சில கோழிகள் கால்கள் இன்றி கிடந்தது. அதுமட்டுமல்லாமல் கோழி கூண்டில் அடை காத்துக் கொண்டிருந்த கோழியும் கொல்லப்பட்டிருந்தது. குஞ்சு பொரிக்கும் தருவாயில் உள்ள கோழி முட்டைகளும் உடைந்து கிடந்தன. இதுபற்றி உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின்பேரில் வனக் காப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆல்வின், வேட்டை தடுப்பு காவலர் சிவா ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். 
காட்டு பூனை
அப்போது மர்ம விலங்கின் காலடித்தடம் பதிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தடத்தை சேகரித்த வனத்துறையினர் கூறியதாவது:-
கோழிகளை கொன்றது காட்டு பூனையாக இருக்கலாம் என கருதுகிறோம். காட்டு பூனை கோழிகளின் தலையையும், கால்களையும் கடித்து தின்று விடும். உடலை அப்படியே போட்டுவிட்டு சென்று விடும். அதுபோலவே கோழிகள் இங்கு இறந்திருக்கலாம். 
எனினும் மர்மவிலங்கின் அட்டகாசம் தொடர்வதால் மக்கள் அங்கு பீதியுடன் உள்ளனர். மீண்டும் இதுபோன்றதொரு சம்பவம் நடக்காமல் தடுக்க மர்ம விலங்கை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.