மாநகராட்சி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரிந்த தீ


மாநகராட்சி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரிந்த தீ
x
தினத்தந்தி 29 July 2021 1:39 AM IST (Updated: 29 July 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று 2-வது நாளாக தீ தொடர்ந்து எரிகிறது.

நெல்லை:
நெல்லை ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று 2-வது நாளாக தீ எரிந்தது

குப்பை கிடங்கு

நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள 55 வார்டுகளிலும் சேரக்கூடிய குப்பைகளை குப்பை வண்டிகள் மூலம் சேகரித்து லாரிகளில் நெல்லை ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து அங்கு கொட்டி வைக்கப்படுகிறது.

மேலும் அங்கு இந்த குப்பைகளை வைத்து உரம் தயாரிக்கும் பணியும் நடக்கிறது.
இருந்தாலும் இந்த குப்பை கிடங்கில் அதிக அளவில் குப்பைகள் சேர்வதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தீ பிடித்தது

இந்த நிலையில் இந்த குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் மாலையில் தீ பிடித்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி வேகமாக எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை, பேட்டை தீயணைப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்களுக்கு உதவியாக மாநகராட்சி ஊழியர்களும் இந்த பணியில் ஈடுபட்டனர். எனினும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

நேற்று 2-வது நாளாக தொடர்ந்து தீ எரிந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தீயை தண்ணீரால் அணைக்க முடியவில்லை என்பதினால் மண்ணை அள்ளிப் போட்டு தீயணைக்கும் பணியை செய்து வருகிறார்கள்.

தீயினால் ஏற்பட்ட புகை காரணமாக நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோடு புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து செல்வதுபோல் சென்றன.

Next Story