போலி கொரோனா சான்று பெற்று கேரளா சென்று திரும்பிய 4 பேர் கைது
போலி கொரோனா சான்று பெற்று கேரளா சென்று திரும்பிய 4 பேர் புளியரை சோதனைச்சாவடியில் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி:
போலி கொரோனா சான்று பெற்று கேரளா சென்று திரும்பிய 4 பேர் புளியரை சோதனைச்சாவடியில் கைது செய்யப்பட்டனர்.
நாய் வாங்குவதற்கு
கோவையைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன்கள் இசக்கிமுத்து (வயது 29), ரமேஷ் (25), நெல்லை மாவட்டம் தெற்கு வீரவநல்லூரை சேர்ந்த கண்ணன் மகன் முகேஷ் (22), திருச்சியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சந்தோஷ் (24). இவர்கள் 4 பேரும் கேரள மாநிலத்திற்கு நாய் வாங்குவதற்காக ஒரு காரில் வந்தனர்.
அவர்கள் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த கேரள மாநில எல்லையான புளியரை சோதனைச்சாவடி வரும்போது அங்கிருந்த சுகாதார துறையினர் இ-பாஸ் மற்றும் கொரோனா தொற்று இல்லை என்ற சான்று கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் 4 பேரும் கொரோனா சான்று இல்லாத சூழலில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
போலி சான்று
அந்த நேரத்தில் அங்கு வந்த புளியரையை அடுத்த பகவதிபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவண மகேஷ் (37) என்பவர் அவர்களுக்கு சான்று தயாரித்து கொடுப்பதாக கூறியுள்ளார். அதற்கு ஒரு சான்றுக்கு ரூ.300 செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த 4 பேரும் அவரிடம் ரூ.1,200 கொடுத்து உள்ளனர்.
இதையடுத்து சரவண மகேஷ் அவர்களுக்கு போலியான கொரோனா சான்றுகள் தயாரித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை வைத்து அவர்கள் கேரளாவிற்கு சென்று விட்டனர். பின்னர் அவர்கள் கேரளா சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
5 பேர் கைது
புளியரை சோதனைச்சாவடியில் அவர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவர்கள் வைத்திருந்தது போலியான கொரோனா சான்றுகள் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புளியரை போலீசில் மருத்துவ அதிகாரி டாக்டர் மோதி புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி போலியான சான்றுகள் கொண்டு வந்த இசக்கிமுத்து, ரமேஷ், முகேஷ், சந்தோஷ் மற்றும் போலி சான்று தயாரித்து கொடுத்த சரவண மகேஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். அவர்களிடம் இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story