தாரமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த பெண் சாவு கணவர் மீது போலீசில் புகார்


தாரமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த பெண் சாவு கணவர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 29 July 2021 2:20 AM IST (Updated: 29 July 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த பெண் இறந்தார். கணவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தாரமங்கலம்
இளம்பெண் பிணம்
தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர் காந்திநகர் காலனியை சேர்ந்த முனியப்பன் மகன் வைரமுத்து (வயது 31), கார் டிரைவரான இவரும், எருமைப்பட்டி பகுதியைச் சேர்ந்த வித்யா (26) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மேகவர்ஷினி (9), நிதிசெல்வம் (6), நிஷாந்த் (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் வித்யா நேற்று திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட உறவினர்கள் வித்யாவை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்தி்ரியில் சேர்த்தனர். அங்கு வித்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போலீசில் புகார்
இதுபற்றி வித்யாவின் தாய் பழனியம்மாள் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், தன்னுடைய மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுதொடர்பாக வித்யாவின் கணவர் வைரமுத்து, அவருடைய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஞானசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இறந்தது எப்படி?
விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைரமுத்துவின் மாமன் மகள் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண்ணுக்கும், வைரமுத்துவுக்கும் பழக்கம் இருந்ததாகவும், இதனை அறிந்த வித்யா, வைரமுத்துவை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே வித்யா வாயில் நுரை தள்ளிய நிலையில் பலியாகி இருப்பது அவரது குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வைரமுத்து, அவருடைய மாமன் மகளிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் வித்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே வித்யா இறந்தது எப்படி? என்பது தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.


Related Tags :
Next Story