ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது


ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது
x
தினத்தந்தி 29 July 2021 2:25 AM IST (Updated: 29 July 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

பீதரில் நிலத்தின் உரிமையை வேறு நபரின் பெயருக்கு மாற்றி கொடுக்க ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு:

ரூ.15 லட்சம் லஞ்சம்

  பீதர் மாவட்டம் டவுன் அருகே லீலாதார் பட்டீல் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தின் உரிமையை தன்னுடைய பெயருக்கு மாற்றுவதற்கு லீலாதார் பட்டீல் முடிவு செய்திருந்தார். இதற்காக பீதர் தாலுகா தாசில்தார் கங்காதேவியிடம் அவர் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட கங்காதேவி, நிலத்தின் உரிமையை லீலாதார் பட்டீல் பெயருக்கு மாற்றி கொடுக்க ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

  ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று லீலாதார் தெரிவித்து விட்டார். பின்னர் 2 பேருக்கும் இடையே நடந்த பேரத்தில் ரூ.15 லட்சம் தருவதாக லீலாதார் பட்டீல் கூறியுள்ளார். இதற்கு தாசில்தார் கங்காதேவியும் சம்மதம் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத லீலாதார் பட்டீல், தாசில்தார் கங்காதேவி மீது பீதர் ஊழல் தடுப்பு படை போலீசில் புகார் அளித்தாா்.

பெண் தாசில்தார் கைது

  போலீசார் அளித்த அறிவுரையின்படி தாசில்தார் கங்காதேவியை சந்தித்து ரூ.15 லட்சம் லஞ்சத்தை லீலாதார் பட்டீல் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு படை போலீசார், கங்காதேவியை மடக்கி பிடித்து கைது செய்தார்கள். அவரிடம் இருந்து ரூ.15 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தாசில்தார் கங்காதேவியின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

  கைதான கங்காதேவி மீது பீதர் ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story