முன்னாள் மந்திரியின் ஆபாச வீடியோ விவகாரத்தில் புதிய விசாரணை அதிகாரியை நியமிக்காதது ஏன்? - அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
முன்னாள் மந்திரியின் ஆபாச வீடியோ விவகாரத்தில் புதிய விசாரணை அதிகாரியை நியமிக்காதது ஏன்? என்று அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
பெங்களூரு:
தொடர் விடுமுறையில் அதிகாரி
கர்நாடக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தலைமையிலான சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுக்கள் மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்போது ஆபாச வீடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் ஆஜரான வக்கீல் சிறப்பு விசாரணை குழு அதிகாரியான சவுமேந்து முகர்ஜி தொடர் விடுமுறையில் இருப்பதால் இந்த வழக்கில் விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கக் கூடாது என்று வாதிட்டார். மேலும் அவர் சிறப்பு விசாரணை குழு போலீசார் தாக்கல் செய்த முதற்கட்ட விசாரணை அறிக்கையில் சவுமேந்து முகர்ஜியின் கையெழுத்து இல்லை என்றும் அவர் வாதிட்டார்.
அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
இதையடுத்து ஆபாச வீடியோ விவகார வழக்கில் தொடர் விடுமுறையில் விசாரணை அதிகாரி இருந்து வருவதால் புதிய விசாரணை அதிகாரியை நியமிக்காமல் இருப்பது ஏன்?, இதுபற்றி அரசு, கோர்ட்டுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதுவரை ஆபாச வீடியோ விவகார வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு சிறப்பு விசாரணை குழு போலீசாருக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story