ரூ.1,000 கோடியில் விவசாயிகளின் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவி திட்டம்; புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
ரூ.1,000 கோயில் விவசாயிகளின் குழந்தைகளுக்கு உயர் கல்வி உதவித்தொகை திட்டம் தொடங்கப்படும் என்று புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
குறைகள் ஏற்படக்கூடாது
முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு பசவராஜ் பொம்மை பெங்களூரு விதான சவுதாவில் மந்திரிசபை கூட்டத்தை நடத்தினார். அதில் தலைமை செயலாளர் ரவிக்குமார் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை பா.ஜனதா கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டேன். அதன் அடிப்படையில் நான் இன்று (நேற்று) முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளேன். புதிய மந்திரிகள் நியமனம் விரைவில் மேற்கொள்ளப்படும். தற்போதைக்கு நான் ஒருவனே மந்திரிசபையில் இருக்கிறேன். நிர்வாகத்தில் குறைகள் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் மந்திரிசபை கூட்டத்தை நடத்தியுள்ளேன்.
நிதி ஒழுக்கம்
இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினேன். சமூகத்தின் கடைகோடி மக்களுக்கும் அரசின் திட்ட பயன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினேன். துறைகள் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன். அதாவது அனைவரும் ஒரு குழுவாக செயல்பட வேண்டும். குறித்த காலத்தில் திட்டங்களை செயல்படுத்தி முடிக்க வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் அதனால் கூடுதல் செலவு மற்றும் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று கூறி இருக்கிறேன்.
அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கும் சுதந்திரத்தை கொடுத்துள்ளேன். கொரோனா நெருக்கடி நிலையில் நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். செலவுகளை குறைந்தபட்சம் 5 சதவீதமாவது குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். கோப்புகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் கோப்புகள் தீா்வு முகாம் நடத்த அறிவுறுத்தி உள்ளேன். நிதி நிலையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
விதவை உதவித்தொகை
முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா கொரோனா பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தார். அவருடன் நாங்கள் சேர்ந்து பணியாற்றினோம். தடுப்பூசிகளை போடும் பணி நடைபெற்று வருகிறது. எனது ஆட்சியில் நடைபெற்ற முதல் மந்திரிசபை கூட்டத்தில், விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம்.
இதற்கு இந்த ஆண்டு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்குகிறோம். சந்தியா சுரக்ஷா திட்டத்தில் ரூ.1,000-ல் இருந்து 1,200 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இதற்கு ரூ.863 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும். இதனால் சுமார் 35.98 லட்சம் பயனாளர்கள் பயன் பெறுவார்கள். விதவை உதவித்தொகையை ரூ.600-ல் இருந்து ரூ.800 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் 17.25 லட்சம் பயன் அடைவர். ரூ.414 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும்.
நல்லாட்சி நிர்வாகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.600-ல் இருந்து 800 ஆக உயர்த்துகிறோம். இதனால் 3.66 லட்சம் பேர் பயன் அடைவர். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.90 கோடி செலவாகும். விவசாயிகளின் குழந்தைகளுக்கு நல்ல உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
வரும் நாட்களில் ஏழைகள், தலித் மக்கள், பெண்கள் மற்றும் சமூக பாதுகாப்பு தேவைப்படுவோருக்கு வேண்டிய உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எடியூரப்பாவின் வழிகாட்டுதலில் பணியாற்றுவேன். அவர் கொரோனா நெருக்கடி காலத்தில் திடமான முடிவுகளை எடுத்தார். நல்லாட்சி நிர்வாகத்தை அவர் நடத்தினார்.
பிரதமரை நேரில் சந்திக்க...
நான் அனைவரையும் அரவணைத்து செல்வேன். ஒரு குழுவாக நாங்கள் செயல்படுவோம். அந்த குழுவின் தலைவராக நான் இருக்கிறேன். நாளை (இன்று) கார்வார் மாவட்டத்திற்கு சென்று வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளேன். வெள்ள சேதங்களுகு்கு உதவி செய்ய மத்திய அரசு ரூ.629 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
பிரதமரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளேன். நேரம் கிடைத்ததும் நான் டெல்லி செல்வேன். புதிய மந்திரிகள் நியமனம் குறித்து அப்போது ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். நான் "ரப்பர் ஸ்டாம்ப்" முதல்-மந்திரியாக இருக்க மாட்டேன். மக்களுக்கு ஆதரவாக முடிவு எடுக்கும் "ரப்பர் ஸ்டாம்ப்" ஆக இருப்பேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story