தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் குவிந்ததால் பரபரப்பு
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று கோவேக்சின் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று கோவேக்சின் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
கொரோனா தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி 80-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் போடப்பட்டு வந்தன. இதில் கோவேக்சின் தடுப்பூசியை முதல் தவணையாக பலர் போட்டுக் கொண்டனர். சமீபகாலமாக கோவேக்சின் தடுப்பூசி வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் 2-வது தவணை தடுப்பூசி போட முடியாமல் மக்கள் சிரமத்தில் இருந்தனர்.
4,160 டோஸ்
கடந்த 15-ந் தேதி கடைசியாக கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதே நேரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்ந்து போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு நேற்று 4 ஆயிரத்து 160 கோவேக்சின் தடுப்பூசிகள் வந்தன. இதில் 2 ஆயிரத்து 80 தடுப்பூசிகள் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கும், 2 ஆயிரத்து 80 தடுப்பூசிகள் தூத்துக்குடி சுகாதார மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
ஏற்கனவே கோவேக்சின் தடுப்பூசி போட்டு, 2-ம் தவணைக்காக காத்திருப்பவர்கள் விவரங்களை ஆன்லைன் மூலம் அதிகாரிகள் பெற்று உள்ளனர். அதன்படி எந்தெந்த பகுதிக்கு எவ்வளவு கோவேக்சின் தேவை என்பதை அறிந்து, அனுப்பி வைத்து உள்ளனர். கோவில்பட்டி சுகாதார மாவட்டம் மூலம் கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தார் உள்ளிட்ட இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதே போன்று தூத்துக்குடியில், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாநகராட்சி பகுதியில் உள்ள கணேஷ்நகர், தபால் தந்தி காலனி ஆரம்ப சுகாதார நிலையம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தடுப்பூசி முகாம் ஆகிய 4 இடங்களில் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டன.
மக்கள் கூட்டம்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் 2-வது தவணைக்காக சுமார் 500 கோவேக்சின் தடுப்பூசிகள் வந்தன.
இதனால் நேற்று மதியம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம் டாக்டர் மாலையம்மாள், நலக்கல்வி அலுவலர் சங்கரசுப்பு ஆகியோர் மேற்பார்வையில் தடுப்பூசிகள் போடுவதற்கான பணிகள் நடந்தன. மக்கள் கொரோனா விதிமுறையை பின்பற்றி ஒவ்வொருவராக தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story