கொரோனா 3-வது அலையை தடுக்க நகர்ப்புறங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து வீடுவீடாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்று கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 3வது அலையை தடுக்க நகர்ப்புறங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து வீடுவீடாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்று கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி:
கொரோனா 3-வது அலையை தடுக்க நகர்ப்புறங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து வீடுவீடாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்று கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் அறிவுறுத்தி உள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநருமான பிரகாஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:-
வீடு வீடாக சோதனை
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் தினசரி மாதிரிகள் எடுப்பது தொடர்ந்து 3000 ஆகவே இருக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளை குறிப்பாக மக்களை அதிகமாக சந்திக்க உள்ள ஓட்டல் பணியாளர்கள், மார்கெட் ஊழியர்கள், ரேசன் கடையில் பணியாற்றுபவர்கள், பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுனர், நடத்துனர்கள், போக்குவரத்து போலீசார், அதிக மக்களை சந்திக்கும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர்களுக்கு தடுப்பூசிகளை விரைந்து போட வேண்டும். 3-வது அலையை எதிர்கொள்ள கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக நகர்ப்புறத்தில்தான் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். எனவே மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி பகுதியில் கொரோனா கள பணியாளர்களை அதிகமாக நியமித்து 2 தினங்களுக்கு ஒருமுறை வீடு வீடாக சென்று காய்ச்சல், கொரோனா அறிகுறிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் டேங்க் அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறிகள் உள்ளோருக்கு கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகள் தேவையான அளவு பெற்று இருப்பில் வைக்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு மையங்களை தயாராக வைக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
திருச்செந்தூர் யாத்திரை நிவாஸ்
பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் தடுப்பணை கட்டும் பணிகளை குறித்த காலத்திற்குள் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் யாத்திரை நிவாஸ் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறையினர் விரைந்து முடிக்க வேண்டும். தூத்துக்குடி பாதாள சாக்கடை பணிகளை தினசரி ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் 248 குடியிருப்பு கூட்டு குடிநீர் திட்ட பணிகளையும் மற்றும் பல்வேறு பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஊரக வளர்ச்சி முகமை ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் தங்களது துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகளை தினசரி ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பெசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் அபிசேக் டோமர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு, வருவாய் உதவி கலெக்டர்கள் சங்கரநாராயணன் (கோவில்பட்டி), கோகிலா (திருச்செந்தூர்), முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, பேருராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் குற்றாலிங்கம், சுகாதாரத்துறை இணை இயக்குநர் முருகவேல், நகராட்சி ஆணையர்கள் கிருஷ்ணமூர்த்தி (கோவில்பட்டி), சுகந்தி (காயல்பட்டிணம்), சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் போஸ்கோராஜா (தூத்துக்குடி), அனிதா (கோவில்பட்டி), மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் அண்ணாதுரை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டியில் ஆய்வு
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஜி.பிரகாஷ் நேற்று கோவில்பட்டி தனிக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுவதை ஆய்வு செய்தார். அப்போது, அந்த திட்டத்தில் பதிக்கப்பட்ட பகிர்மான குழாய் மூலம் விரைவில் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.10.5 கோடி மதிப்பில், கட்டப்பட்டு வரும் தாய் சேய் நல பிரிவு புதிய கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் நிறுவப்பட்டு வரும் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில்,‘ தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி முதல் தவணை மட்டும் சுமார் 20 சதவீதம் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணையும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுமார் 14 சதவீதம் பேர் உள்ளனர். 3-வது அலையை எதிர்கொள்ள மருத்துவ துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை ஆகியவை தயாராக உள்ளது. கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு தேவையான மருத்துவர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல், கோவில்பட்டி புதிய கூடுதல் பஸ்நிலையத்தை செயல் படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். மேலும், இங்கு விதிவிலக்கு பெற்று ஷேர் ஆட்டோ முறையை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.
கடம்பூர் ராஜூ வலியுறுத்தல்
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கண்காணிப்பு அதிகாரியை சந்தித்து பேசினார். அப்போது, ‘ கோவில்பட்டி நகருக்கு தினசரி குடிநீர் வழங்கவும், கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஓடை பகுதியில் தூர் வாரி கான்கிரீட் தளம் அமைத்து, தடுப்புச் சுவர் கட்டி முடிக்கவும், சாலைகளில் பிரகாசமான விளக்குகள் அமைக்கவும், கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் பராமரிப்புப் பணிகள் செய்து செயல் படுத்தவும், கூடுதல் பஸ் நிலையத்திலிருந்து அண்ணா பஸ் நிலையம் வரை 24 மணி நேரமும் சர்குலர் பஸ் இயக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார். இந்த ஆய்வின் போது கலெக்டர் செந்தில்ராஜ், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் முருகவேல், துணை இயக்குநர் அனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story