ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு


ஆதிச்சநல்லூரில்  உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க  மத்திய தொல்லியல் துறையினர்  ஆய்வு
x
தினத்தந்தி 29 July 2021 1:29 PM GMT (Updated: 29 July 2021 1:29 PM GMT)

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய தொல்லியல் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம்:
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய தொல்லியல் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.
உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்
தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர், ஏரல் அருகே சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மட்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டறிப்பட்டன.
இதையடுத்து அங்கு கிடைத்த பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு
இந்த நிலையில் புதுடெல்லியில் இருந்து மத்திய தொல்லியல் துறை இயக்குனர் அஜய் யாதவ் தலைமையில், இணை இயக்குனர் சஞ்சய் மஞ்சூர், திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் உள்ளிட்ட குழுவினர் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெறும் இடங்களை பார்வையிட்டனர். அங்குள்ள புளியங்குளம் முதுமக்கள்தாழி தகவல் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்களையும் பார்வையிட்டனர்.
அருங்காட்சியகம் அமைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அகழாய்வில் கிடைத்த பொருட்களை தற்காலிகமாக காட்சிப்படுத்த கால்வாய் ரோட்டில் தேர்வு செய்யப்பட்ட மண்டபத்தையும் பார்வையிட்டனர். அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழியின் மீதே ‘சைட் மியூசியம்’ அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதன்ஜெய் நாராயணன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story