பள்ளிகொண்டா அருகே கன்டெய்னர் லாரி மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலி


பள்ளிகொண்டா அருகே  கன்டெய்னர் லாரி மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலி
x
தினத்தந்தி 29 July 2021 7:23 PM IST (Updated: 29 July 2021 7:23 PM IST)
t-max-icont-min-icon

கன்டெய்னர் லாரி மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலி

அணைக்கட்டு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 70). இவர், வேலூர் புறநகர் மாவட்டம் கே.வி. குப்பம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. துணைச் செயலாளராக இருந்தார். அவர் நேற்று காலை பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் உள்ள வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அலுவலகத்துக்கு கட்சி நிர்வாகிகளை சந்திக்க வந்தார். அங்கு, கட்சி நிர்வாகிகளை சந்தித்து விட்டு பகல் 11 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சிறிது தூரம் நடந்து சென்று சாலையை கடக்க முயன்றார். 

அப்போது அந்த வழியாக ஆம்பூரில் இருந்து வேலூரை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென அவர் மீது மோதியது. அதில் பலத்த காயம் அடைந்த சொக்கலிங்கம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களும், கட்சிக்காரர்களும் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சொக்கலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். 

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கன்டெய்னர் லாரி டிரைவர் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story