திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால் சாதித்து காட்டுவார்கள். சப்-இன்ஸ்பெக்டராக தேர்வான திருநங்ைக சிவன்யா பேட்டி


திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால் சாதித்து காட்டுவார்கள். சப்-இன்ஸ்பெக்டராக தேர்வான திருநங்ைக சிவன்யா பேட்டி
x
தினத்தந்தி 29 July 2021 7:42 PM IST (Updated: 29 July 2021 7:42 PM IST)
t-max-icont-min-icon

அரசு துறைகளில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால் சாதித்து காட்டுவார்கள் என்று சப்-இன்ஸ்பெக்டராக தேர்வான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சிவன்யா கூறினார்.

வாணாபுரம்

இளம் வணிகவியல் பட்டதாரி

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாவுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வவேல். இவரின் மனைவி வளர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வவேல் இறந்து விட்டார். அவர்களுக்கு 3 பிள்ளைகள். முதலாவதாக பிறந்தவர் ஸ்டாலின். எம்.ஏ.பி.எட் படித்துள்ளார். தற்போது அவர் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 2-வதாக பிறந்தவர் சிவன்யா. திருநங்கையாக மாறி விட்டார். 3-வதாக பிறந்தவர் தமிழ்நிதி, தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். 

திருநங்கை சிவன்யா, இளம் வணிகவியல் பட்டதாரியாவார். பள்ளி படிப்பை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் இளம் வணிகவியல் படித்து பட்டம் பெற்றுள்ளார். சிவன்யா தொடர்ந்து அரசு நடத்தும் போட்டித் தேர்வுக்கு தயாரானார். அவர் போலீஸ் துறையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்றார்.
 
அதைத்தொடர்ந்து உடல் தகுதி தேர்வு, நேர்காணல் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றி பெற்று தமிழகத்தின் 2-வது திருநங்கை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 26-ந்தேதி சிவன்யா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆணையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றார். 

இதுகுறித்து சிவன்யா கூறியதாவது:-

சாதித்து காட்டுவார்கள்

நாங்கள் சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களை மிகுந்த சிரமத்துக்கு இடையே பெற்றோர் படிக்க வைத்தனர். நான் திருநங்கையாக மாறியதும், என்னை தனிமைப் படுத்தாமல் எனது குடும்பத்தினர் நன்றாக வளர்ந்தனர். எனக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்தனர். நான் தற்போது உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன். நான் போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு தற்போது நிறைவேறி உள்ளது.

என்னுடைய அடுத்த கனவு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக வேண்டும் என்பதே எனது லட்சியம். திருநங்கைகளுக்கு அரசு இத்தகைய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால் பல்வேறு அரசு துறைகளில் சாதித்துக் காட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்

சிவன்யாவின் தாயார் வளர் கூறுகையில், எனது மகள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவியை ஏற்பது பெருமைக்குரியது. எனது மகளுக்கு ஆதரவு கரம் அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இது குறித்து சிவன்யாவின் அண்ணன் ஸ்டாலின் கூறுகையில், சமூகத்தில் இதுபோல் ஒதுக்கப்படும் திருநங்கைகளுக்கு அரசு ஆதரவு அளித்தால், அவர்களில் பலர் நல்ல பணிகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். திருநங்கை என சிவன்யாவை தாங்கள் ஒதுக்காமல் அவரிடம் அன்பு, பாசம் காட்டி அரவணைத்து எங்களின் குடும்ப உறுப்பினர்கள் ஊக்கம் அளித்ததால் தான், அவர் உயர்ந்த நிலைைய அடைந்துள்ளார், என்றார். 

2-வது போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர்

ஏற்கனவே தமிழகத்தில் முதல் முறையாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகாயாஷினி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பதவியேற்று தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார். அந்த வரிசையில் தமிழகத்தில் 2-வதாக திருநங்கை சிவன்யா போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தின் முதல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருநங்கை சிவன்யாவை அப்பகுதி மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story