சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்


சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 29 July 2021 2:36 PM GMT (Updated: 29 July 2021 2:36 PM GMT)

தரமற்ற முறையில் இருப்பதாக கூறி சாலை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

வேடசந்தூர்:

வேடசந்தூர் நாடார் தெருவில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே இருந்த தார் சாலைக்கு பதிலாக, புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

ஏற்கனவே இருந்த தார் சாலையை தோண்டி எடுக்காமல், அதன் மேல் பகுதியில் அப்படியே பேவர்பிளாக் கற்களை வைத்து சாலை அமைப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அங்கு அமைக்கப்படுகிற கழிவுநீர் கால்வாயில் சிறுபாலம் கட்ட தரமற்ற கம்பிகளை பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் கதிரேசன் தலைமையில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டனர். 

பின்னர் அவர்கள், தரமான முறையில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு பணியை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து ஒப்பந்ததாரர் தரப்பில் அங்கு வந்த சிலர், தரமான முறையில் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.

 அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் வேடசந்தூரில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story