தேனியில் பணிகள் முடிந்து 8 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை


தேனியில் பணிகள் முடிந்து 8 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை
x
தினத்தந்தி 29 July 2021 2:44 PM GMT (Updated: 29 July 2021 2:44 PM GMT)

தேனியில் பணிகள் முடிந்து 8 ஆண்டுகளாக ரேஷன் கடை திறக்கப்படாமல் உள்ளது.


தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சி 29-வது வார்டுக்கு உட்பட்ட சுப்பன்தெரு பகுதியில் ரேஷன் கடை இல்லை. இங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு வாரச்சந்தை எதிரே உள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டியது உள்ளது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்து ரேஷன் பொருட்களை வாங்கி வரும் நிலைமை காலம் காலமாக தொடர்கிறது.
இதனால், தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக இந்த பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பழைய பஸ் நிலையம் பின்புறம் 29-வது வார்டு மக்களுக்காக புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த கட்டிடம் திறக்கப்படவில்லை. புதிய ரேஷன் கடை கட்டிடத்துக்கு லாரியில் பொருட்களை கொண்டு வந்து இறக்குவதற்கு அகலமான சாலை வசதி இல்லை என்று கூறி இந்த கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பழைய பஸ் நிலையத்தின் பின்பகுதியில் சுவரை இடித்து இந்த பகுதிக்கு தற்போது பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், இந்த கட்டிடம் அமைந்துள்ள பகுதியானது திறந்தவெளி மதுபான பார் ஆக மாறியுள்ளது. இதன் முன்பு தினமும் பலர் அமர்ந்து மது அருந்துகின்றனர். அதை மக்கள் வேதனையுடன் பார்த்து செல்கின்றனர். எனவே, கட்டி முடிக்கப்பட்டு காட்சிப் பொருளாக கிடக்கும் இந்த கட்டிடத்தை திறந்து, ரேஷன் கடை செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வலியுறுத்தலாக உள்ளது.



Next Story