சுருளிப்பட்டியில் கலெக்டரின் காரை நிறுத்தி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் புகார்


சுருளிப்பட்டியில் கலெக்டரின் காரை நிறுத்தி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் புகார்
x
தினத்தந்தி 29 July 2021 3:08 PM GMT (Updated: 29 July 2021 3:08 PM GMT)

சுருளிப்பட்டியில் கலெக்டரின் காரை நிறுத்தி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் புகார் செய்தனர்.


கம்பம்:
கம்பம் ஒன்றியத்தில் சுருளிப்பட்டி ஊராட்சி  உள்ளது. இங்கு தலைவராக இருப்பவரின் கணவர் ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடு செய்வதாக அதிருப்தியடைந்த வார்டு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார் அனுப்பினர். இதுபற்றி விசாரணை நடைபெற்ற நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று கம்பம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆங்கூர்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது சுருளிப்பட்டி ஊராட்சிக்கு வந்த கலெக்டரின் காரை அதிருப்தி வார்டு உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கலெக்டர் காரில் இருந்து இறங்கி அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஊராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீடு இருப்பதாகவும், வரி விதிப்பு, மனை அங்கீகாரம், குடிநீர் இணைப்பு உள்ளிட்டவைகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் மனு கொடுத்தனர். மனுவை கலெக்டர் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயகாந்தன், கோதண்டபாணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

Next Story