ஊட்டி தேயிலை பூங்காவில் 250 கிலோ கிரீன் டீ விற்பனை
ஊட்டி தேயிலை பூங்காவில் 250 கிலோ கிரீன் டீ விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி,
ஊட்டி அருகே தொட்டபெட்டாவில் தோட்டக்கலைத்துறையின் தேயிலை பூங்கா உள்ளது. அங்கு 6 ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு பறிக்கப்படும் பச்சை தேயிலை கூட்டுறவு தொழிற்சாலைக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
பின்னர் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு நீலகிரியின் முக்கிய பொருளாதாரமான தேயிலை விவசாயத்தை பிரபலப்படுத்தவும், தேயிலைத்தூள் உற்பத்தி செய்வது குறித்து அறிந்து வாங்கி செல்லவும் சிறிய தொழிற்கூடம் அமைக்கப்பட்டது.
அங்கு பறித்த பச்சை தேயிலை சூடேற்றும் எந்திரத்தில் வைக்கப்படுகிறது. பின்னர் உலர வைக்கப்பட்டு, மீண்டும் சூடேற்றப்படுகிறது. குறிப்பிட்ட வெப்பநிலையில் வைக்கப்படுவதால் தேயிலை சுருங்கி தேயிலைத்தூளாக மாறுகிறது.
எந்தவித சேர்க்கையும் இல்லாமல் இயற்கையாக கிரீன் டீ தயாரிக்கப்படுவதால், இதற்கு மவுசு அதிகம். ஒரு கிலோ கிரீன் டீ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை அருந்துவதால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. பால், சர்க்கரை சேர்க்காமல் நன்றாக கொதிக்கும் தண்ணீரில் தேயிலைத்தூளை போட்டு வடிகட்டி குடிக்கலாம்.
இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறியதாவது:- தேயிலை பூங்காவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 6 கிலோ பச்சை தேயிலையை கொண்டு ஒரு கிலோ தேயிலைத்தூள் தயாரிக்க முடியும்.
இதுவரை 250 கிலோ கிரீன் டீ விற்பனையாகி உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்ய 50 கிராம் முதல் பேக்கிங் செய்யப்படுகிறது. முழு ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் வராததால் பச்சை தேயிலை தொழிற்சாலைக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஊரடங்கிலும் ஏற்கனவே இங்கு தேயிலைத்தூள் வாங்கிய சுற்றுலா பயணிகள் செல்போனில் தேயிலை பூங்கா அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேயிலைத்தூள் வாங்க ஆர்வம் காட்டினர். தற்போது 6 பேர் வாங்கி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story