மாவட்ட செய்திகள்

ரவுடி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் - வியாபாரி மனு + "||" + I will commit suicide by setting myself on fire

ரவுடி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் - வியாபாரி மனு

ரவுடி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் - வியாபாரி மனு
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கடை வைக்க பணம் கேட்டு மிரட்டும் ரவுடி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இ்ல்லாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் வியாபாரி மனு அளித்தார்.
வேலூர்,

வேலூர் நேதாஜி மார்க்கெட் வியாபாரி வேணு தலைமையில் வியாபாரிகள் சிலர் வேலூர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டிருந்தாவது:-

நான் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சில்லரை வியாபாரம் செய்து வருகிறேன். இன்று (அதாவது நேற்று) காலை 6 மணிக்கு வழக்கம்போல் வியாபாரம் செய்து கொண்டு இருந்தேன். அப்போது காவலர் ஒருவர் என்னிடம் வந்து வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கூப்பிடுவதாக கூறி அழைத்து சென்றார்.

சப்-இன்ஸ்பெக்டர் என்னிடம் மார்க்கெட்டில் ஏன் கடை போட்டாய் என்றும், ஏற்கனவே போடப்பட்டுள்ள திருட்டு வழக்கிற்கு சாட்சி சொல்ல வரும்படி கூறினார். அதற்கு நான் உடன்படாததால் என் கன்னத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அடித்தார்.

அதைத்தொடர்ந்து சிறிதுநேரத்தில் ஒருவர் தன்னை ரவுடி என்று கூறி மார்க்கெட்டில் ஒரு கடைக்கு ரூ.20 ஆயிரம் தர வேண்டும். அதைத்தவிர மாதந்தோறும் ரூ.1,500 தர வேண்டும். தர மறுத்தால் மார்க்கெட்டில் கடை போட முடியாது. மேலும் பொய்வழக்கு போட்டு ஜெயிலில் தள்ளி விடுவோம் என்று மிரட்டுகிறார். அவருக்கு ஆதரவாக வடக்கு போலீஸ் நிலைய காவலர்கள் மற்றும் அதிகாரிகள் செயல்படுகின்றனர்.

பணம் கொடுக்காத சில்லரை வியாபாரிகள் மார்க்கெட்டில் கடை போடக்கூடாது என்று மிரட்டுகிறார்கள். பணம் கேட்டு மிரட்டும் ரவுடி மற்றும் உடந்தையாக செயல்படும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் பொய்வழக்கு போட்டால் நான் குடும்பத்துடன் மார்க்கெட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன்.

 இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.