ஆழியாறு அணை பூங்காவுக்கு படையெடுக்கும் காட்டுப்பன்றிகள்
திறந்தவெளியில் கழிவுகளை கொட்டுவதால் ஆழியாறு பூங்காவுக்கு காட்டுப்பன்றிகள் படையெடுத்து வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி
திறந்தவெளியில் கழிவுகளை கொட்டுவதால் ஆழியாறு பூங்காவுக்கு காட்டுப்பன்றிகள் படையெடுத்து வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
கொட்டப்படும் கழிவுகள்
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை சிறந்த சுற்றுலா மையமாக உள்ளது. இங்குள்ள அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்க்க தமிழகம் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இதை நம்பி அந்த பகுதியில் உணவகங்கள், கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகள், மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சேகரமாகும் கழிவுகளை பெரும்பாலும் குப்பை தொட்டியில் கொட்டுவது இல்லை என்று கூறப்படுகிறது.
பூங்காவிற்கு அருகில் வாகன நிறுத்தும் இடத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் குப்பைகள், கழிவுகளை கொட்டுகின்றனர். இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பாதுகாப்பு இல்லை
ஆழியாறில் அணை பூங்காவிற்கு முன் கடைகள், உணவகங்களில் சேகரமாகும் கழிவுகள் அந்தப்பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டப்பட்டு வந்தது.
தற்போது வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் இந்தப்பகுதி வனப்பகுதியின் அருகில் இருப்பதால், கழிவு களை சாப்பிட வனப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக காட்டுப் பன்றிகள் படையெடுத்து வருகின்றன.
அவ்வாறு வரும் ஒவ்வொரு பன்றிகளும் பெரிய அளவில் இருக்கிறது. அவை சில நேரத்தில் ஆழியாறு பூங்காவுக்குள்ளும் நுழைந்து விடுகிறது.
உடனடி நடவடிக்கை
இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரமணாக மாலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் பூங்காவிற்குள் பயத்துடன் இருக்க கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.
அதுபோன்று காட்டுப்பன்றிகள் சாலையில் தாறுமாறாக ஓடுவதால், அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கக்கூடிய நிலையும் ஏற்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப்பகுதியில் ஒரு காட்டுப்பன்றி விபத்தில் சிக்கிக்கொண்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றுவதுடன், குப்பைகளை கொட்ட தொட்டி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story