பனப்பட்டி கிராமத்தில் புதர்மண்டி கிடக்கும் எரியூட்டும் மேடை
பனப்பட்டி கிராமத்தில் எரியூட்டும் மேடை புதர்மண்டி கிடக்கிறது. அதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நெகமம்
பனப்பட்டி கிராமத்தில் எரியூட்டும் மேடை புதர்மண்டி கிடக்கிறது. அதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
எரியூட்டும் மேடை
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பனப்பட்டி ஊராட்சி. இங்குள்ள பனப்பட்டி கிராமத்தில் ஏராளமான பொது மக்கள் வசித்து வருகிறார்கள்.
அவர்கள் அனைவருமே விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் அவர்களை எரிப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு எரியூட்டும் மேடை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் அந்த எரியூட்டும் மேடை தற்போது புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
முட்புதர்கள் ஆக்கிரமித்து உள்ள அந்த எரியூட்டும் மேடையை சீரமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
புதர்மண்டி கிடக்கிறது
பனப்பட்டியில் உள்ள மயானத்தில் இருக்கும் எரியூட்டும்மேடையை சுற்றிலும் முட்புதர்கள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் உயிரிழந்தவர்களின் உடலை அந்தப்பகுதியில் தரையில் வைத்து எரியூட்டும் நிலை நீடித்து வருகிறது.
இங்குள்ள முட்புதர்கள் ஆக்கிர மிப்பை அகற்றி சீரமைக்கக்கோரி அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் சிலர் மயானத்தில் உள்ள நடைபாதையில் பிணத்தை வைத்து எரித்து வருகிறார்கள். மேலும் இறந்தவர்கள் உடலை ஏற்றி வரும் சொர்க்க ரதம், மயானத்தில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் மழை மற்றும் வெயிலில் அது காய்ந்து வருவதால் துருப்பிடித்த நிலையில் உள்ளது.
சீரமைக்க வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து எரியூட்டும் மேடையை ஆக்கிரமித்து இருக்கும் முட்புதர்களை அகற்றி சீரமைப்பதுடன் சொர்க்க ரதத்தை பாதுகாப்பாக நிறுத்த வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story