டி.சி. வாங்கிய பிளஸ்-2 மாணவன் தேர்வில் தேர்ச்சி: அரசுப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்
அரசுப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்
வேலூர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு, பிளஸ்-2 செய்முறை தேர்வு விகிதத்தில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் கடந்த 19-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
அதில், வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த மார்ச் மாதம் மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) பெற்ற மாணவன் தேர்ச்சி பெற்றிருந்தான். பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்றவர்கள், உயிரிழந்தவர்களின் விவரங்களை சரியாக நீக்காததே இதற்கு காரணம் என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரமணிக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
தலைமை ஆசிரியர் வீரமணி மீது பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் கடந்த பிப்ரவரி மாதம் பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். ஆனால் நிர்வாக காரணங்களால் அவர் தொடர்ந்து அந்த பள்ளியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரமணி பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story