திருவண்ணாமலை கிரிவலப் பாதையில்13.ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு


திருவண்ணாமலை கிரிவலப் பாதையில்13.ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு
x

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அக்னி லிங்கம் கோவிலில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் காலத்துக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை

13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம், அந்த அமைப்பின் ஆவண பிரிவு மூலம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அக்னி லிங்கம் கோவிலில் ஆய்வு செய்யப்பட்டது. 

அப்போது தெற்கு நோக்கிய இக்கோவிலின் நுழைவு வாயிலில் இடப்பக்க சுவற்றில் 17 வரி கொண்ட 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்துக் கல்வெட்டு ஒன்று ஆவணம் செய்யாமல் இருப்பது கண்டெடுக்கப்பட்டது.
இந்த கல்வெட்டியில் எழுதப்பட்டு உள்ளது குறித்து அவர் கூறியதாவது:-

ஸ்வஸ்தஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டானது சுந்தர பாண்டியன் என்று சொல்லப்பட்டிருந்தாலும், பிற்கால பாண்டியர்களில் எந்த சுந்தரபாண்டியன் என்று அறிய மெய்க்கீர்த்தியில் தெளிவான விவரங்கள் சொல்லப்படவில்லை. மேலும் இக்கல்வெட்டில் வீரராமநல்லூர் என்னும் ஊரில் குடியேறும் தறிக்குடிகள், காசாக்குடி மக்கள், செட்டிகள் மற்றும் வாணியர்கள் மாதம் ஒன்றுக்கு ஒரு மாகாணி பணம் இக்கோவிலுக்கும், ஒரு மாகாணி பணம் ஊர்சபைக்கும் வரியாகச் செலுத்த வேண்டும் என்றும், இதை மாற்றம் செய்வோர்கள் சிவத்துரோகம் மற்றும் ராஜ்ஜியதுரோகம் செய்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. 

இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள துவாதசி திதி, அவிட்டத்து நாள் மற்றும் திங்கட்கிழமையும் கொண்டு இக்கல்வெட்டானது 2-ம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1276-1292) கல்வெட்டு என்று அறிய முடிகிறது. அவனின் 12-ம் ஆட்சியாண்டு என்பதால் இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1288-ம் ஆண்டாகும்.

இத்தாலி நாட்டுப்பயணி மார்கோ போலோ

முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்கு பின்னர் வந்த முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி 1268-1311) காலமே பாண்டியர்களின் பொற்கால ஆட்சியாகக் கருதப்படுகிறது. எஞ்சி இருந்த சேரநாட்டின் கொல்லத்தையும் வென்று குமரி முதல் நெல்லூர் வரை உள்ள மிகப்பெரிய நிலப்பரப்பை முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் தன் தம்பிமார்கள் இருவர் மற்றும் புதல்வர்கள் இருவருடன் சேர்ந்து ஒரே சமயத்தில் 5 பேராக இணையாட்சி புரிந்தனர்.

இம்மன்னன் முதலாம் மாறவர்மன் குலசேகரனுடன் இணையாட்சி செய்த பொழுது கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு கொங்கு பகுதியை ஆட்சி செய்தான். பழனி கோவிலுக்குத் தனது பெயரில் ஏற்படுத்தப்பட்ட அவனிவேந்த ராமநல்லூர் என்ற ஊரைத் தானமாக வழங்கிய செய்தியை அறிய முடிகிறது. இதன் மூலம் இக்கல்வெட்டின் குறிக்கப்படும் ஊரான வீரராமநல்லூர் இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள சங்கராமநல்லூர் பகுதியாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. எனவே கல்வெட்டில் குறிக்கப்படும் தறிக்குடிகள், கசாக்குடி மக்கள், செட்டிகள் மற்றும் வாணியர்கள் இவ்வூரில் குடியேற வரிப்பணம் வசூல் செய்யப்பட்டு உள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறியலாம். 

இதே காலகட்டத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்த இத்தாலி நாட்டுப் பயணியான மார்கோ போலோ இம்மன்னனை சவுந்தர பாண்டிதேவர் என்று தனது பயணக் குறிப்புகளில் குறிப்பதோடு, 5 மன்னர்கள் சேர்ந்து இணையாட்சி செய்வதையும் வெகுவாக பாராட்டுகிறார். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்கம் கோவில்கள் அனைத்தும் சாலையின் இடப்புறமாக அமைந்திருக்க, அக்னி லிங்கம் மட்டும் வலது புறம் அமைந்திருப்பதும் காலத்தின் புதிராக இருந்து வரும் நிலையில் கல்வெட்டுத் தகவல் கிடைக்கப்பெற்ற ஒரே கோவில் இதுவாகும். 
இதுவரையில் சரியான தகவல்கள் கிடைக்கக்பெறாமல் அஷ்டலிங்க கோவில்கள் 16-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் என்ற அனுமானத்தையும் இக்கல்வெட்டு உடைக்கிறது. கிரிவலப் பாதையில் உள்ள இதர கோவில்களையும் ஆய்வு செய்தால் மேலும் தகவல்கள் கிடைக்கக்கூடும். 
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story