ஸ்ரீமுஷ்ணத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்


ஸ்ரீமுஷ்ணத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 29 July 2021 10:13 PM IST (Updated: 29 July 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணத்தில் தொடர் மழையால் நெல் மூட்டைகள் சேதமானதால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஆண்டுதோறும், தாலுகா அலுவலகம் அருகில் ஒரு இடத்தில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள், தங்களது நெல் மூட்டைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பே நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவர்கள் இரவு, பகலாக தங்கியிருந்து தங்களது நெல் மூட்டைகளை பாதுகாத்து வந்ததுடன், நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 

விவசாயிகள் சாலை மறியல்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. மேலும் சில நெல் மணிகள் முளைத்தன. 
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், மழையால் முளைத்து போன நெல்மணிகளை எடுத்து வந்து ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சிதம்பரம் கொள்முதல் அலுவலர் அரங்கநாதனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு போலீசார் பேசினர். இதைத்தொடர்ந்து இன்று(அதாவது நேற்று) மாலைக்குள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுப்பதாக நெல் கொள்முதல் நிலைய அலுவலர் அரங்கநாதன் தெரிவித்ததாக, விவசாயிகளிடம் போலீசார் தெரிவித்தனர். 

கொள்முதல் நிலையம் திறப்பு

இதையேற்று விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று மாலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Next Story