திருக்காட்டுப்பள்ளி பகுதியில் தண்ணீர் இன்றி காயும் குறுவை பயிர்கள் - விவசாயிகள் வேதனை


திருக்காட்டுப்பள்ளி பகுதியில் தண்ணீர் இன்றி காயும் குறுவை பயிர்கள் - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 29 July 2021 5:17 PM GMT (Updated: 29 July 2021 5:17 PM GMT)

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

காவிரி பாசனப்பகுதி குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து கடந்த மாதம் (ஜூன்) 16-ந் தேதி காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணைக் கால்வாயில் நவீனப்படுத்துதல், புனரமைத்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் நடைபெற்றதால் தொடக்கத்தில் இருந்தே குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

முழு கொள்ளளவில் கல்லணைக்கால்வாயில் நேற்று வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. அதிகபட்சமாக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் கிளை வாய்க்காலில் தண்ணீர் சென்று சேராததால் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

கல்லணைக்கால்வாயில் தலைப்பு பகுதியாக உள்ள பூதலூர் ஒன்றியத்தின் சோளகம்பட்டி, கடம்பன்குடி, இந்தளூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லணைக்கால்வாயின் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் வாய்க்கால்களில் முழுமையாக செல்ல இயலாமல் குறுவை சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு இந்த பகுதிகளில் முழு அளவில் குறுவை சாகுபடி நடைபெற்றதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு பெரும்பாலான விளை நிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளன. கிளை வாய்க்கால்களின் தலைப்பு பகுதியில் உள்ள சொற்ப பரப்பில் உள்ள நிலங்கள் மட்டும் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் ேவதனையில் உள்ளனர்.

கல்லணைக்கால்வாயில் இருந்து ஆயில் என்ஜின் மூலம் தண்ணீரை ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று நாற்றங்காலுக்கு பாய்ச்சும் நிலை உள்ளது. போதுமான தண்ணீர் இல்லாததால் 540 கிலோ விதை நெல் போட்ட நாற்றங்கால் காய்ந்து நாற்று பறிக்க இயலாத நிலைமை ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

உடனடியாக கல்லணைக்கால்வாயில் கூடுதலாக தண்ணீர் விட்டு சோளகம்பட்டி, கடம்பங்குடி, இந்தலூர் ஆகிய பகுதிகளில் காய்ந்து வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி அருகே மகராஜபுரம் கிராமத்தில் காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் பெற்று சாகுபடி நடைபெறும். கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மகராஜபுரம் கிராமத்தில் கால்வாய் பாசன தண்ணீரைக் கொண்டு சாகுபடி செய்து வரும் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பை முறைப்படுத்தி குறுவை சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள உதவ வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story