மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி + "||" + Motorcycle collision; 2 teenagers killed

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
ஜமுனாமரத்தூரில் பஸ்சை முந்திசெல்ல முயன்றபோது மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
திருவண்ணாமலை

நேருக்குநேர் மோதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா பெருங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் ராஜசேகர் (வயது 19), மற்றொரு ரவி என்பவரின் மகன் சதீஷ் (21). மணி என்பவரின் மகன் முருகன் (16). இவர்கள் 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் ஜமுனாமரத்தூரில் இருந்து போளூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

அங்குள்ள முருகன் கோவில் அருகில் சென்றபோது போளூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்றை அவர்கள் மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிரே கோமுட்டேரி பகுதியை சேர்ந்த ராமராஜ் (34), குழந்தை (34) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும், ராஜசேகர் உள்ளிட்ட 3 பேர் சென்ற மோட்டார்சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. 

2 வாலிபர்கள் பலி

இதில் ராஜசேகர், சதீஷ், முருகன் ஆகியோர் பஸ்சுக்கு அடியில் விழுந்தனர். ராஜசேகர், சதீஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். முருகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ராமராஜ், குழந்தை ஆகியோர் காயமின்றி தப்பினர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் ஜமுனாமரத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜமுனாமரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ், முருகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
இது குறித்த புகாரின் பேரில் ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.