அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் நடந்தது
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றக்கோரி தஞ்சையில், வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர்,
தேர்தல் நேரத்தில் தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தஞ்சை கோர்ட்டு சாலையில் உள்ள தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் துரை.திருஞானம், மாணவரணி செயலாளர் காந்தி, பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, வக்கீல் சரவணன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்தும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சாவித்திரிகோபால், மகளிரணி செயலாளர் அமுதாரவிச்சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத்தலைவர் பாலை.ரவி. அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபகேசன், முன்னாள் கவுன்சிலர் சண்முகபிரபு மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை ஆட்சிக்கு வந்தால் குறைப்பதாக கூறியதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அ.தி.மு.க., வினர் மீது பொய் வழக்குப் போடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்ததை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், மத்திய அரசை கண்டித்தும் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் தஞ்சை மாநகரிலும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் பொது இடங்கள் மற்றும் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story