போத்தனூர் அருகே நடைபயிற்சி சென்ற முதியவர் அடித்து கொலை


போத்தனூர் அருகே நடைபயிற்சி சென்ற முதியவர் அடித்து கொலை
x
தினத்தந்தி 29 July 2021 5:29 PM GMT (Updated: 29 July 2021 5:29 PM GMT)

போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூரில் நடைபயிற்சி சென்ற முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார். வாகனத்தில் சென்றபோது அதிக ஒலி எழுப்பியதை தட்டி கேட்டதால், வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

கோவை

போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூரில் நடைபயிற்சி சென்ற முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார். வாகனத்தில் சென்றபோது அதிக ஒலி எழுப்பியதை தட்டி கேட்டதால், வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நடைபயிற்சி சென்ற முதியவர்

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் ரோடு காமராஜர் புரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 72). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர் தினமும் காலை, மாலை நேரங்களில் அந்த பகுதியில் உள்ள சாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் பொன்னுசாமி நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் உள்ள சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த சிவா (30) என்பவர், தனது மனைவியுடன் வந்தார்.

கட்டையால் தாக்கினார்

அப்போது, நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த பொன்னுசாமி அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் சிவா அதிக ஒலி எழுப்பியுள்ளார். மேலும் அவர் மீது மோதுபோல மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த பொன்னுசாமி, நான் ஓரமாக தானே செல்கிறேன் எதற்கு இப்படி ஒலி எழுப்பி, என் மீது மோதுவது போல வருகிறாய் என்று சிவாவை தட்டிக்கேட்டார். 

இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில், ஆத்திரமடைந்த சிவா, பொன்னுசாமியை சரமாரியாக தாக்கினார். மேலும், அருகில் கிடந்த கட்டையால் அவரை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதற்கிடையில், பொன்னுசாமியின் சத்தம் கேட்டு, அவரது மகன் மருதாசலம் அங்கு விரைந்து வந்தார். அவரையும் சிவா தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அவர் தனது மனைவியுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

கொலை

இதையடுத்து படுகாயம் அடைந்த பொன்னுசாமியை, மருதாசலம்  அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், போத்தனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில், முதியவரை அடித்து கொலை செய்த சிவா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story