கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை
கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டதாரிகள் தேர்வு
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த ஆண்டு துப்புரவு பணியிடங்களுக்கு பட்டதாரிகள் பலர் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்கள் சில தூய்மை பணிகளை தவிர்த்து அலுவலக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு அலுவலக பணி ஒதுக்கக்கூடாது என்று பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் தூய்மை பணிக்கு தேர்வானவர்களை வேறு பணி வழங்க கூடாது என மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் நியமனத்துக்கு முன்னதாக, கருணை மற்றும் வாரிசு அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக நியமிக்கப்பட்டு, பிறகு அலுவலக பணிகளில் ஈடுபட்டு வந்தவர்களும் தூய்மை பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
இந்த நிலையில் மாநகராட்சி வடக்கு மண்டலம் 55-வது வார்டில் சிலர், அலுவலர்களின் ஆதரவுடன் தூய்மை பணியில் ஈடுபடாமல், பதிவேட்டில் மட்டும் கையொப்பமிட்டு செல்வதாக மீண்டும் புகார் எழுந்தது. இதற்கிடையில், நேற்று முன்தினம் பணிக்கு வராத ஊழியர்களிடம், தூய்மை பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 5 தூய்மை பணியாளர்கள் மீது மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் மீது அளிக்கப்பட்ட பொய் புகாரை திரும்ப பெறக்கோரியும், தூய்மை பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை தூய்மை பணி மட்டுமே ஒதுக்கப்பட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியும்
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க பொதுச்செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார்.
சுழற்சி முறையில் பணி
இதுகுறித்து அறிந்த வடக்கு மண்டல உதவி ஆணையர் ஆர்.மோகனசுந்தரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், சில தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகளின் உறவினர்கள் என்பதால் சரியாக பணியில் ஈடுபடுவதில்லை. இதனை தட்டிக்கேட்ட 5 தூய்மை பணியாளர்கள் மீது பொய்யாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.
இதனைத்தொடர்ந்து தூய்மை பணிக்காக தேர்வு செய்யப்பட்ட அனைத்து பணியாளர்களையும் சுழற்சி முறையில் தூய்மை பணியில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு வடக்கு மண்டல உதவி ஆணையர் ஆர்.மோகனசுந்தரி அறிவுறுத்தினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story