சீரமைப்பு பணியில் பொதுப்பணித்துறையினர் தீவிரம்


சீரமைப்பு பணியில் பொதுப்பணித்துறையினர் தீவிரம்
x
தினத்தந்தி 29 July 2021 11:07 PM IST (Updated: 29 July 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

நல்லாறு அருகே சேதமடைந்த காண்டூர் கால்வாயை, பொதுப்பணித்துறையினர் சீரமைக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர்.

தளி
நல்லாறு அருகே சேதமடைந்த காண்டூர் கால்வாயை, பொதுப்பணித்துறையினர் சீரமைக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர். 
காண்டூர் கால்வாய் 
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திஅணை கட்டப்பட்டுள்ளது. அணைக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் நீராதாரமாக உள்ளது. அடர்ந்த வனப் பகுதியில் கட்டப்பட்டுள்ள காண்டூர் கால்வாய் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்திஅணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அதைத்தொடர்ந்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு இரண்டு மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் 4 மண்டலங்களுக்கு தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. அது தவிர பூலாங்கிணர், கணக்கம்பாளையம், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சீரமைப்பு பணி தீவிரம் 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் மழை தீவிரம் அடைந்தது. அதைத்தொடர்ந்து ஆறுகள் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. சர்க்கார்பதி மின் உற்பத்திக்கு பின்பு கால்வாயில் வந்த தண்ணீர் நேற்று முன்தினம் மாலை திருமூர்த்திஅணையை அடைந்தது. இந்த சூழலில் கால்வாயின் 34 வது கிலோமீட்டரில் நல்லாற்றுக்கு அருகே இடது பக்க சுவர் சேதமடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கால்வாயில் வந்து கொண்டிருந்த தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்பு அதில் நேற்று காலை முதல் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதில் பொதுப்பணித்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பணிகள் நிறைவடைந்த பின்பு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வருகின்ற 3ந் தேதி 4ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story