மானாமதுரை,
மானாமதுரை வாரச்சந்தையில் வியாபாரிகள் முத்திரையிடாத தராசுகள், எடைக்கற்களை பயன்படுத்தி வியாபாரம் செய்து வருவதாக சிவகங்கை தொழிலாளர் நலத்துறைக்கு புகார்கள் வந்தன. இதன் பேரில் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கதிரவன், செந்தில், பிரியதர்சினி, சேதுராஜ் ஆகியோர் மானாமதுரை வாரச்சந்தையில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வாரச்சந்தை வியாபாரிகளின் தராசுகள், எடைக்கற்கள் முத்திரையிடப்பட்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்தனர். முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள், இரும்பு தராசு, மேஜை தராசுகள், இரும்பு எடைக்கற்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் 92 உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முத்திரையிடப்படாத எடைக்கற்களை உபயோகித்த வியாபாரிகளை ெதாழிலாளர் நலத்துறையினர் எச்சரித்தனர். இது போன்று முத்திரையிடாத தராசு, எடைகற்கள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.