பொத்தனூர் பேரூராட்சியில் அனுமதியின்றி கருங்கல் ஏற்றி சென்ற டிராக்டர் பறிமுதல்-கலெக்டர் ஸ்ரேயாசிங் அதிரடி
பொத்தனூரில் கலெக்டர் ஸ்ரேயாசிங் அதிரடியால் அனுமதியின்றி கருங்கல் ஏற்றி சென்ற டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
பரமத்திவேலூர்:
கலெக்டர் ஆய்வு
பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ஓவியம்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இடும்பன்குளம் உள்ளது. இந்த குளத்தை சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் இடும்பன்குளத்தை நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேகர் உடன் இருந்தார். தொடர்ந்து கலெக்டர் ஸ்ரேயாசிங் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அலுவலக ஊழியர்கள், பணியாளர்களின் வருகை பதிவேடுகள், முக்கிய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் எஸ்.கொந்தளம் கிராம நிர்வாக அலுவலகத்திலும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
டிராக்டர் பறிமுதல்
மேலும் எஸ்.கொந்தளம் ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களின் வருகை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து பொத்தனூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு செய்தபோது, கருங்கல் ஏற்றி சென்ற டிராக்டரை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது, உரிய அனுமதியின்றி கருங்கல் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்ய பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ஆய்வுகளின் போது, கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டேவிட் அமல்ராஜ், ஜெயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story