மத்திய அரசின் முடிவுக்கு ரங்கசாமி வரவேற்பு
மருத்துவப்படிப்பில் இடஒதுக்கீடு அறிவித்துள்ள மத்திய அரசின் முடிவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, ஜூலை.30-
மருத்துவப்படிப்பில் இடஒதுக்கீடு அறிவித்துள்ள மத்திய அரசின் முடிவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இணையவழி நிகழ்ச்சி
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் புதிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதை முன்னிட்டு மாநிலம், யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள், முதல்-அமைச்சர்கள் மற்றும் கல்வி அமைச்சர்களிடையே இணைய வழி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று மாலை உரையாற்றினார்.
இதில் கவர்னர் மாளிகையில் இருந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சட்டசபையில் இருந்தபடி முதல்-அமைச்சர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து இடஒதுக்கீடு தொடர்பான முடிவை வரவேற்று புதுச்சேரி முதல்-அமைச்சர் அலுவலகம் நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறப்பான முடிவு
அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரிகளின் 15 சதவீத இடங்களை மத்திய அரசின் தொகுப்பிற்கு அளிக்கப்பட்டதில் கடந்த பல ஆண்டுகளாக 27 சதவீத இடஒதுக்கீடு பெற முடியாமல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சமூகநீதி கிடைக்காமல் இருந்தது.
இது சம்பந்தமாக பல வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வந்தன. இந்தநிலையில் பிரதமர் மோடி வரலாற்று சிறப்பான கொள்கை முடிவை அறிவித்துள்ளார். அதாவது நம் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் அனைத்திந்திய தொகுப்பிலும், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் அளித்துள்ள மத்திய அரசின் முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
பாராட்டு
சமூக நீதிக்கான ஒரு பெரும் செயலை செய்துள்ள பிரதமர் மோடிக்கு புதுச்சேரி அரசின் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனால் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் கூடுதலாக பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 1,500 மாணவர்களும், மருத்துவ பட்ட மேற்படிப்பில் கூடுதலாக 2,500 மாணவர்களும் பயனடைவார்கள். இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story